
மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முந்தைய தி.மு.க அரசு மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்து அராஜகமாக நடந்து கொண்டது. பின்னர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது த.வெ.க அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதால் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டப் பார்த்தது விஜய் அரசு. நேற்று முன்தினம் தான் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை த.வெ.க அரசு கைது செய்துள்ளது.
தற்போது மீண்டும் இன்று கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.






