தமிழ்நாடு

17 கைதிகள் தப்பியோட்டம்; சிறைத்துறை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் பொறுப்பு? : எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி!

17 கைதிகள் தப்பியோடும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை அரசு விளக்க வேண்டும்.

17 கைதிகள் தப்பியோட்டம்; சிறைத்துறை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் பொறுப்பு? : எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி சிறையில் 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்: சிறைக் காவலர்களை மட்டும் பணியிடை நீக்கம் செய்வது நியாயமா? சிறைத்துறை நிர்வாகத்தின் தோல்விக்கு யார் பொறுப்பு? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடியிருப்பது தமிழகத்தின் சிறை நிர்வாகத்தில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

அக்டோபர் 26ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அறையின் கதவைத் திறந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காவலர்கள் காயமடைந்துள்ளனர். ஒன்பது சிறைத்துறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கண்காணித்து, அவர்கள் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்கான பொறுப்பு சிறைத்துறை நிர்வாகத்தையே சாரும். ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை அரசு விளக்க வேண்டும்.

பணியில் இருந்த காவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில், பாதுகாப்பு நடைமுறைகள், பணியாளர் எண்ணிக்கை, கண்காணிப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக உத்தரவுகள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தனவா என்பதையும் விசாரிக்க வேண்டும். கீழ்நிலைப் பணியாளர்களை மட்டும் தண்டித்துவிட்டு, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பது ஏற்கத்தக்கதல்ல.

தப்பியோடிய கைதிகளை விரைந்து கண்டுபிடிப்பதுடன், இச்சம்பவத்திற்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகளையும் கண்டறிய வேண்டும். மாநிலத்தின் அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு இச்சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறைக் காவலர்களைப் பணியிடைநீக்கம் செய்வது மட்டும் நிர்வாகத் தோல்விக்கான தீர்வாகாது. உண்மையான பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories