முரசொலி தலையங்கம்

வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு.. - முரசொலி விமர்சனம்!

சட்டசபையில், மாநிலத்தின் முதலமைச்சர் உட்கார முடியாமல் ஓடியது இதுதான் முதல் முறை என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு.. - முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

05.09.2026

ஓடு... ஓடு... ஓடு...

கரூரில் ஓடிய விஜய், சட்டமன்றத்தில் இருந்தும் ஓடி இருக்கிறார். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாதவர் என்பதை தினமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் விஜய்.

“வரும் திங்கட்கிழமை பதிலுரை அளிக்கிறேன். நான் பதிலுரை தரும்போது, யாரும் எழுந்து ஓடிறக் கூடாது’’ என்று சொல்லி விட்டு முதலமைச்சர் விஜய் என்ன செய்தார்? அதைச் சொல்லிவிட்டு ஓடிவிட்டார். இதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தை அவர் மதிக்கும் லட்சணமா?

காவல் துறையை முதலமைச்சர் விஜய் கையில் வைத்துள்ளார். அத்துறையின் சார்பில் மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. ஒவ்வொரு உறுப்பினர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்து, குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவரது கடமை ஆகும்.

மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலுரை என்பதை இறுதியாகச் சொல்லலாம் என்றாலும், மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது பதில் சொல்வது அவையின் மரபு ஆகும். அமைச்சர்களின் கடமையும் ஆகும். அதைக்கூட முதலமைச்சர் விஜய் செய்வது இல்லை. நகராட்சி நிர்வாகத் துறை அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்கான மானியக் கோரிக்கையை அவர் தான் தாக்கல் செய்தார். ஆனால் பதிலுரை வழங்கியது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

சட்டம் ஒழுங்கு பற்றி இதுவரை எழுப்பப்பட்ட கேள்விகள் எதற்கும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் பதில் சொல்லவில்லை. சட்ட அமைச்சர் நிர்மல்குமார், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர்தான் பதில் சொல்லி இருக்கிறார்கள். பேசக் கூடாது என்று சபதம் எடுத்து விட்டு உட்கார்ந்து இருக்கிறாரா, அல்லது அவருக்கு எதுவுமே தெரியாதா எனத் தெரியவில்லை.

வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு.. - முரசொலி விமர்சனம்!

டயலாக்குகளை மனப்பாடம் செய்து விட்டு அதை வெளிப்படுத்துகிறாரே தவிர விவாதங்களில் பங்கெடுத்து விளக்கம் சொல்லக் கூடியவராக அவர் இல்லை. அப்படி எண்ணமும் இல்லை. ஒருவேளை இவை எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா? அப்படி நினைத்தால் அதை விட சபையை அவமானப்படுத்தும் செயல் ஏதும் இருக்க முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உறுப்பினரது கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் கடமையும் பொறுப்பும் முதலமைச்சருக்கு இருக்கிறது. அவர் பதில் சொல்லப் போவதில்லை என்றால் அவர் அவைக்கு வரவும் தேவையில்லை. பேரவைக் கூட்டத் தொடரை நடத்தத் தேவையும் இல்லை. முதலமைச்சர் முன்னால் ஒரு கருத்தைச் சொல்லி அதில் அவரது பதிலைப் பெற்று, நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குத்தான் சபை கூடுகிறதே தவிர, சம்பிரதாயத்துக்காக அல்ல. அந்தச் சிறு கடமையைக் கூடச் செய்யாத, செய்யத் தெரியாத, செய்ய விரும்பாத, செய்ய நினைக்காத, செய்ய வேண்டும் என்பதை உணராத, செய்ய வேண்டும் என்பதை அறியாத ஒருவரின் கையில் தமிழ்நாடு சிக்கி இருப்பதை நினைத்தால் வேதனையே எழுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். பொதுவான குற்றச்சாட்டுகளுக்கு அந்த நேரத்திலேயே முதலமைச்சர் பதில் அளித்திருக்கலாம். குறிப்பான குற்றச் சாட்டுகளுக்குத்தான் பதில் வாங்கிவிட்டு பின்னர் பதிலுரையில் சொல்லலாம். ‘நீங்கள் பதிலுரை சொல்லும் போது இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும்’ என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்டுக் கொண்டார். ‘பதில் சொல்வேன்’ என்று சொல்லி விட்டு முதலமைச்சர் விஜய் அமர்ந்திருக்க வேண்டும். மாறாக, ‘நீங்கள் ஓடிவிடக் கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் சொன்னதைக் கூட கிண்டலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனது துறையின் சார்பில் விவாதம் நடக்கும் போது, அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் விஜய் அவையை விட்டு ஓடியது எந்த வகையில் நியாயம்?

வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு.. - முரசொலி விமர்சனம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டும் அந்தளவுக்கு அனலாக இருந்தது. முதலமைச்சர் விஜய்யை உட்கார விடாமல் அவஸ்தைக்கு உள்ளாக்கியது. பதில் சொல்லவும் முடியவில்லை. உட்கார்ந்து கேட்கவும் முடியவில்லை.

‘உலகப் புகழ் பெற்ற பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறேன்’ என்ற மிதப்பில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்க, ‘இது மாற்றமல்ல, நாற்றம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அம்பலப்படுத்தினார். இதைக் கேட்டுத் தான் ஓடினார் முதலமைச்சர் விஜய். உண்மையில் இவை அனைத்தும் அவருக்கே தெரியாத தகவல்களாகத்தான் இருக்கும். ‘சூப்பர்ண்ணா’ என்று சுற்றி இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்த விஜய்க்கு, நாட்டின் நிலைமையை உணர வைத்துவிட்டது உதயநிதியின் உரை. ‘படம் சூப்பர் பிளாப்’ ஆனால் நடிகர்கள் வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஓடினார் முதலமைச்சர் விஜய்.

சட்டசபையில், மாநிலத்தின் முதலமைச்சர் உட்கார முடியாமல் ஓடியது இதுதான் முதல் முறையாக இருக்கும். 100 நாளில் விஜய்யின் பிம்பம் கிழிந்து தொங்குகிறது. அவரே அதைக் கிழித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அவர் ஓடியதன் மூலமாக உணர முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் ஒருவர் எழுதி இருப்பது கமெண்ட் அல்ல, அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு...

’ஆளுநர் ரவியை ஓட விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

முதலமைச்சர் விஜய்யை ஓட விட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

இந்தியக் குடியரசு வரலாற்றில் இது புதுசு...” – என்று எழுதி இருக்கிறார்.

ஓடுவது கேவலம்.

ஓட விடுவது கம்பீரம்.

banner

Related Stories

Related Stories