
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் வருகிறது. தினந்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொள்ளைகள், கொலைகள் என்பதோடு, குழந்தைகளும் காணாமல் போய் வருகின்றனர். இப்படியாக நடைபெறும் தொடர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத விஜய் அரசு, எல்லாவற்றுக்கும் திமுக மீதே பழியை போட்டு வருகிறது.
பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இவ்வாறான குற்றச்செயல்களில் தவெக-வினரே ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது விழுப்புரத்தில், புதுச்சேரியை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் சீசிங் குமார் (எ) ராஜேந்திரகுமார். இவர் நேற்று (அக்.26) இரவு சுமார் 11 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே தமிழ்நாட்டின் எல்லையான மேட்டுப்பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ராஜேந்திர குமாரை சராமரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ராஜேந்திரகுமார் தப்பிக்க முயன்றும் முடியவில்லை. அந்த கும்பல் அவரை சராமரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திர குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா, தனிப்பட்ட தகராறு ஏதேனும் இருந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






