
தாப்ரோத்துள்ள இணைய உலகத்தில் பலரும் தங்களுக்கு தெரிந்த பலவற்றை Youtube, இன்ஸ்ட்டா போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இதற்காக சமூக வலைதளம் மூலம் அவர்களுக்கு பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கும். அதே போல் ஒரு சிலர் சில முக்கியமான விஷயங்களை பகிர்வதை அறிய வேண்டுமென்றால், அவற்றை இணையவாசிகள் பணம் கட்டி பெற முடியும்.
அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஹரிஷ் (27) என்பவர், Finance with Harish என்ற பெயரில் சமூக வலைதள பக்கத்தில் தனக்கு தெரிந்த நிதி ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வந்தார். அதுமட்டுமின்றி, அவர் பலரிடமும் பணம் பெற்றுக்கொண்டு Mutual fund, முதலீடு போன்றவற்றை குறித்தும் ஆலோசனை வழங்கியதோடு, குறிப்பிட்ட சிலவற்றில் முதலீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக நிதி குறித்த ஆலோசனைகளை வழங்குவதில் பெரும்பாலான சிக்கல் என்னவென்றால், யார் ஆலோசனை வழங்குகிறார்களோ, அவர்களை நம்பி அவரை பின் தொடர்பவர்கள் குறிப்பிட்டவற்றில் முதலீடு செய்வர். அவ்வாறு முதலீடு செய்தால் அது நஷ்டத்தில் சென்றால், அதில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும்.
எனவே குறிப்பிட்ட சில நிதி ஆலோசனை வழங்குவதற்கு உரிய உரிமம் வேண்டும். அதாவது SEBI மூலம் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் (RIA - Registered Investment Advisor) பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருந்தால் மட்டுமே ஆலோசனைகளுக்காக மக்களிடமிருந்து நேரடியாகக் கட்டணம் (Advisory Fee) வசூலிக்க முடியும்.
ஆனால் ஹரிஷிடம் RIA இல்லை என்று கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பிரபல Youtuber ஜேசன் சாமுவேல் 'Dark World Of Finance Influencers' என்ற பெயரில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய ஜேசன் சாமுவேல், Finance with Harish-ஐ பற்றியும், அவரது நிதி ஆலோசனைகளை பற்றியும் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதோடு RIA இல்லாமலே ஒருவர் எவ்வாறு ஆலோசனை வழங்க முடியும் என்றும் சாடியிருந்தார்.

மேலும் சமீபத்தில் ARN எண்ணைப் பெற்றுவிட்டு, முன்னரே AMFI உரிமம் வைத்திருந்ததாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியிருக்கிறார் என்றும் ஜேசன் தெரிவித்திருந்தார். ஜேசன் சாமுவேலின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளான நிலையில், பலரும் ஹரிஷுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கினர்.
ஜேசன் சாமுவேல் வீடியோ வெளியாவதற்கு சில செப்டம்பர் மாதம், சுமார் 13 லட்சம் Followers-களை (1.3 மில்லியன்) Finance with Harish பக்கத்தை மெட்டா நிறுவனம் முடக்கியது. எனினும் மீண்டும் புதிய கணக்கை அவர் தொடங்கிய நிலையில், அதுவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடங்கியது. எனவே அவர் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் ஜேசனின் இந்த வீடியோ வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியது. ஏற்கனவே ஹரிஷின் நிதி ஆலோசனை குறித்து இணையவாசிகள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், ஜேசனின் வீடியோ மிகவும் வைரலானது.
இந்த நிலையில், நேற்று ஹரிஷ் புதுச்சேரியில் உள்ள தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தற்போது பலர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இறுதியாக ஹரிஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மனக்குமுறலைகளை தெரிவித்திருந்தார்.

ஹரிஷின் தற்கொலைக்கு ஜேசன் சாமுவேல் தான் காரணம் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வருமாறு :-
“நடந்த சம்பவத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். என் மனம் ஆழ்ந்த துயரத்திலும் சோகத்திலும் உள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் அவரை இணைய வழியில் அச்சுறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை. அவர் நிதி ஆலோசனை வழங்க உரிய SEBI RIA உரிமம் பெறாதது, மற்றும் சமீபத்தில் தான் ARN எண்ணைப் பெற்றிருந்தும் முன்னரே AMFI உரிமம் வைத்திருப்பதாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியது மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.
உண்மையில், எனது வீடியோவில் கூட அவர் முறையான SEBI உரிமத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வந்து பணிகளைத் தொடருமாறு தான் நான் கேட்டுக்கொண்டேன். இப்படி ஒரு விபரீதமான முடிவு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. இந்த இழப்பிற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தனது மகனின் இறப்புக்கு காரணம் Cyberbullying (இணையம் மூலம் மிரட்டுதல்) என்று ஹரிஷின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது நண்பர்களும் ஹரிஷின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தற்போது பிரபல Youtuber ஜேசன் சாமுவேல் மீது, தற்கொலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒருபக்கம் ஹரிஷுக்கு ஆதரவாகவும், மற்றொரு பக்கம் ஜேசன் சாமுவேலுக்கு ஆதரவாகவும் இணையாவசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் 14416 / 044-24640050 என்ற தற்கொலை தடுப்பு உதவி எண்களை அழைக்கவும்!






