
நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளான சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர், பல கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ உயர்தர மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாக ஒன்றிய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியாயின. இந்த நிலையில், இச்செய்தியை வெளியிட்ட செய்தியாளர்களை, த.வெ.க நாகை நகர நிர்வாகி பால்ராஜ் என்பவர் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
த.வெ.க மாவட்டச் செயலாளர் சுகுமாருடன் தாம் இருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அனைத்துச் செய்தியாளர்களும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை; உங்களைக் காலி செய்துவிடுவோம்" என்று செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் பிரஸ் கிளப் சார்பாகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் என்பவரை நேரில் சந்தித்து, தவெக நிர்வாகி பால்ராஜ் மீது புகார் மனு அளித்தனர்.
இப்புகாரின் பேரில் செய்தியாளர்களை மிரட்டிய தவெக நிர்வாகி பால்ராஜ் மீது நாகை நகரக் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் செய்தியை வெளியிட்ட செய்தியாளர்களுக்கு அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மாவட்டச் செயலாளர் சுகுமார், தன்னைப் பற்றி மேலிடத்திற்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறி உளவுத்துறை அதிகாரியைப் பொதுவெளியில் மிரட்டி எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களையும், காவல் அதிகாரிகளையும் மிரட்டுவது வாடிக்கையாகி வருவதாகப் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.








