தமிழ்நாடு

முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறும் த.வெ.க அரசு : தங்கம் தென்னரசு விமர்சனம்!

இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?

முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் திணறும் த.வெ.க அரசு : தங்கம் தென்னரசு விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா?

கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா?

வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?

முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்– டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?

த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories