
தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பகுதியில், தேர்தல் அலுவலர் ஒருவர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்ததாகக் கூறி, தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட திமுகவினர் அந்த வாக்குச்சாவடிக்குச் சென்று தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்களிக்கச் சென்ற மூதாட்டியிடம், விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டதாகவும், தான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பேன் என மூதாட்டி கூறியபோதும், விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மூன்று முறை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மூதாட்டி விசில் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு வெளியே வந்து நடந்ததைத் தெரிவித்தார்.
இதையடுத்து, திமுகவினர் வாக்குச்சாவடிக்குச் சென்று மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுகன்யா, காலையிலேயே வாக்களித்துத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
த.வெ.க ஆட்சியின் 3 மாதகாலத்தில் மக்கள் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. ஏமாற்றத்தைத்தான் சந்தித்து இருக்கிறார்கள். இதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவது உறுதி என தனது வாக்கினைச் செலுத்திய பின் தாராபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் சுகன்யா பேட்டியளித்துள்ளார்!
மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட 109 ஆவது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட வீராச்சிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகே, வாக்காளர்களுக்கு தவெகவினர் டோக்கன் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டோக்கன் குறித்து அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியதால், பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்காக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் 16% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் தாராபுரம் தொகுதியில் 17.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.






