
டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள பூங்காவில், 17 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஒரு குற்றவாளி துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்காஜி கோயிலுக்கு நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் 17 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன் சென்றுள்ளார்.
பின்னர், அவர்கள் அருகில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குச் சென்றபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் தங்களைக் 'காவல்துறையினர்' எனக் கூறி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, சிறுமியின் நண்பரைத் தாக்கிய அக்கும்பல், சிறுமியைத் துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் குறித்து நேற்று இரவே சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகளைப் பிடிக்க இரவோடு இரவாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த நபர் போலீஸாரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து, காவல்துறையினர் தற்காப்பிற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அக்குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு, தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரு குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






