
தமிழ்நாடு அரசின், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை கிடைக்காததால் தனது கல்வி முற்றிலும் பாதிக்கும் சூழல் உறுவாகியுள்ளதாக மலேசியா ஆய்வு மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் மீண்டும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ”எல்லா தகவலையும் கொடுத்த பிறகும், மீண்டும் முதலில் இருந்து தரவுகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது பேராசிரியர்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையை நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள். கல்லூரியிலிருந்து என்னை நீக்கப் போகிறார்கள். என்னுடைய ஆய்வையும் நான் சமர்ப்பிக்க முடியாமலாகிவிட்டது. உங்களிடம் இருக்கும் அதிகாரம் அனைத்தையும் என் மீது ‘target' செய்து என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்.
’ஏன் உனக்கு ஆய்வுபடிப்பு... நீ அடிமையாதானே இருந்தே...? நீ அப்படியே இரு!’ என்று நேரடியாக சொல்லி விடுங்கள். மன உளைச்சலை தராதீர்கள். ரோகித் வெமுலாவை ஒன்றிய அமைச்சகம் என்ன செய்ததோ அதைத்தான் இன்று உங்களின் அமைச்சகமும் எனக்கு செய்கிறது. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” என வோதனையுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் “எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்" என தெரிவித்துள்ளார்.






