தமிழ்நாடு

மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்காதே : த.வெ.க அரசுக்கு SFI கண்டனம்!

மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்கபட்டிருக்கும் போதும், தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்த வண்ணமே இருக்கிறது.

மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்காதே : த.வெ.க அரசுக்கு SFI கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயின்று வரும் மாணவர்களின் நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என த.வெ.க அரசுக்கு இந்தியா மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலதலைவர் மிருதுளா, மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு சமூக நீதிக் துறை 04.05.26 அன்று செய்தி வெளியீடு எண் 746 பொதிந்த அரசாணையின் கீழ், 2026-2027 கல்வியாண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை திறந்துவைத்தது.

இந்த உதவித்தொகை திட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கமானது, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அயல்நாட்டு பல்கலைக்கழககங்களில் சேர்ந்து தங்களது முதுகலை பட்டப் படிப்பையோ அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்பயோ மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்தற்கே ஆகும்.

ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழியில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் அவரே தெரிவித்திருப்பதைப் போல, மலேசியாவில் தனது இரண்டாம் ஆண்டு மருத்துவ ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுவரும் பாரதிதாசனுடைய நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகையை அரசு தரப்பு வழங்க தவறியுள்ளது. மேலும், அவரது கடந்த ஆண்டு செலவுகளுக்குரிய கணக்குகளையும், அவற்றுக்கான ரசீதுகளையும் கடந்த ஜூன் 8 அன்றே அவர் சமர்ப்பித்திருக்கும் நிலையில், அதையும் அரசு தரப்பு வழங்க தவறியுள்ளது. இப்படி, தமிழ்நாடு அரசின் உத்தரவாதத்தின் பெயரில் அயல்நாட்டிற்கு சென்று தங்களது படிப்பை மேற்கொண்டுவரும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். செலவுகளை செய்துவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வது எனும் நடைமுறை, இந்த உதவித்தொகையின் நோக்கத்தையே சிதைப்பதாய் இருக்கிறது.

மேலும், தனியார் வங்கிகளின் உத்தரவாதத்தையும், மத்திய அரசின் உத்தரவாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஐக்கிய ராஜ்யத்தை (United Kingdom) சார்ந்த பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசினுடைய உத்தரவாதத்தை ஏற்க மறுத்திருக்கின்றன. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு, சேரவேண்டிய கல்வி நிலையங்களுக்கு நிபந்தனையாகயிருக்கும் QS உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 1000 இடங்களுக்குள் அடங்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், புகழ்பெற்ற, தரம்வாய்ந்த ஏராளமானவை ஐக்கிய ராஜ்யத்தில் இடம்பெற்றிருக்கும்போது, இப்பிரச்சனையை தீர்க்க, துரிதமான முறையில் நேரடியாக தமிழ்நாடு அரசோ, அல்லது இந்திய வெளியுறவுத் துறையின் மூலமோ தலையிட தவறியுள்ளது.

இப்படி மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்கபட்டிருக்கும் போதும், தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்த வண்ணமே இருக்கிறது. தனது உத்தரவாதத்தின் பெயரில் அயல்நாடுகளுக்குச் சென்று படித்து வரும் மாணவர்களையும் கைவிட்டுள்ளது. இப்படி தன் பொறுப்புகளை மறந்து. மெத்தனமாக செயல்படும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசே, சமூக நீதித்துறையே

1) அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளில் பயின்று வரும் மாணவர்களின் நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகையை உடனடியாக வழங்கிடு! 2) கடந்த ஆண்டுக்கான செலவுகளுக்குரிய கணக்குகளையும், ரசீதுகளையும் சமர்ப்பித்திருக்கும் மாணவர்களுக்கு அந்த செலவினங்களுக்கான தொகையை உடனடியாக செலுத்திடு!

3) இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களை சல்லடை போட்டு சலிக்கும் "செலவுகளை செய்துவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வது" எனும் நடைமுறை கைவிடு!

4) மாணவர்களுக்கு சேரவேண்டிய உதவித்தொகையை, தேவையின் அடிப்படையில் அளித்திடு!

5) தமிழ்நாட்டு அரசிள் உத்திரவாதத்தை ஏற்க மறுக்கும் ஐக்கிய ராஜ்யத்தை (United Kingdom) சார்ந்த பல்கலைக்கழகங்களிடம், நேரடியாகவும், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்றிடு!

வஞ்சிக்கப்படும் மாணவர்களை கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசையும், சமூக நீதித்துறையையும் செயலில் இறங்கி, மேற்காணும் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories