
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த இறையன்பு என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் கோயில் திருவிழாவுக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றார்.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த மாருதி எர்டிகா கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இறையன்புவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கபெருமாள் கோயிலில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்தில் தொடர்புடைய மாருதி எர்டிகா கார் மற்றும் ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் த.வெ.க அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் என்பது தெரியவந்தது. அமைச்சர் அரசு வாகனத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த நிலையில், அவருக்குப் பின்னால் வந்த கார் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பலியான இறையன்புவின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், காரை ஓட்டிவந்த மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் சின்ன அக்னி (28) என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






