தமிழ்நாடு

ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் விஜய், போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (07-09-2026)

ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு?

ரூ.1200கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போகிறாராம் முதலமைச்சர் விஜய்.‘அறுக்கத் தெரியாதவர் இடுப்பில் 52 கத்தி எதற்கு?’என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் நினைவுக்கு வருகிறது.

விஜய் முதலமைச்சராகப் பதவிக்கு வந்து 100 நாட்களைக் கடந்து விட்டது. அவரை யாராவது முதலமைச்சராக நினைக்கிறார்களா? அவர்களது கட்சிக்காரர்களே நினைக்கிறார்களா? அவரை இன்னமும் ஹீரோவாகத்தான் நினைக்கிறார்களே தவிர முதலமைச்சராக நினைக்கவில்லை.

அல்லது விஜய்க்காவது தான் ஒரு முதலமைச்சர் என்ற நினைப்பு இருக்கிறதா? அப்படி நடந்து கொள்கிறாரா? இல்லை.

அவரைப் பற்றி நிர்வாக ரீதியாக ஏதாவது தகவல் வருகிறதா? இல்லை. இன்று கோட் போட்டார், இன்று வேட்டி கட்டினார், வெள்ளிக்கிழமை எல்லாம் வேட்டி கட்டுகிறார், கண்ணாடி போட்டார், படியில் வேகமாக இறங்கினார், பேண் லூப்பில் விரலை விட்டு நின்றார்... இவைதான் முதலமைச்சராக ஆனபிறகு அவரைப் பற்றி டிரெண்ட் ஆன செய்திகள். இதனால் துளி நன்மையாவது நாட்டுக்கு உண்டா?

சொன்ன வாக்குறுதிகளை, சொன்ன மாதிரி நிறைவேற்றினாரா? இல்லை. சொன்னது ஒன்று, செய்வது ஒன்று என்பதுதான் அவரது பாணியாக இருக்கிறது.

‘தானும் செய்ய மாட்டார், அடுத்தவரையும் செய்ய விடமாட்டார்’ என்பதைப் போலத் தான் நடந்து கொள்கிறார். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தினார்.

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்கு பெயரை மாற்றினார். ‘வெற்றி’ என்ற தனது கட்சி ஸ்டிக்கரை ஒட்டினார்.

அவர் கையில் போலீஸ் துறை இருக்கிறது. நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதற்கும் அவர் சபையில் பதில் சொன்னது இல்லை. மவுனமாகவே இருக்கிறார். வேறு அமைச்சர்களை வைத்து பதில் சொல்ல வைக்கிறார்.

அவர் கையில் நகராட்சி நிர்வாகத் துறை இருக்கிறது. அது தொடர்பாகவும் எதுவும் பேசுவது இல்லை சபையில். அந்தத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் அவர் பங்கேற்கவும் இல்லை. பதில் சொல்லவும் இல்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்தான் பதில் சொன்னார். இதுதான் விஜய்யின் லட்சணம் ஆகும்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் விஜய், போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். சினிமாவிலாவது போலீஸ் கடைசியில் வந்துவிடும். ஆனால் விஜய் போலீஸ் வருவதே இல்லை.

பல்வேறு குற்றங்களில் த.வெ.க. நிர்வாகிகளே ஈடுபடுகிறார்கள். அதைத் தடுக்க தைரியம் இல்லாதவராக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு அற்றவராக இருக்கிறார் முதலமைச்சர்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் மீது விஜய் ரசிகை ஒருவரே பாலியல் புகார் சொன்னார். அந்த சரவணன் மீது நடவடிக்கை இல்லை. அந்தப் பெண்ணை கட்சியை விட்டு நீக்கினார் விஜய். இதுதான் அவரது நீதிபரிபாலனம்.

‘அரசு வக்கீல் நியமனத்துக்கு பணம் வாங்குகிறார்கள்’ என்று அவரது கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே புகார் கூறினார். அவரைக் கட்சி விட்டு நீக்கினார் விஜய். இதுதான் அந்த தூய சக்தியின் உண்மையான குணம்.

100 நாளில் 100 விதமான ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனை புலனாய்வு பத்திரிக்கைகள், சமூக ஊடகங்கள் எழுதி வருகின்றன. இவை எதற்கும் இந்த ஆட்சியாளர்களால் இதுவரை பதில் இல்லை.

முதலமைச்சரின் அறையை உருவாக்க விடப்பட்ட டெண்டரில் எத்தனை விதமான ஊழல்கள்? டெண்டர் விடுவதற்கு முன்னால் அறைக்குள் வேலைகள் நடக்கிறது. குறிப்பிட்ட தொகையை விட 37 விழுக்காடு குறைவாக ஒருவர் டெண்டர் தொகை குறிப்பிடுகிறார். இதெல்லாம் ‘விஜய் ஃபார்முலா’ ஆகும்.

ஒரு நகை நிறுவனம், ஒரு ரூபாய் போட்டுக் கொண்டு, கோடிக்கணக்கான மதிப்பிலான டெண்டரை தூக்குகிறது. அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் விஜய் ஒரு காலத்தில் நடித்துள்ளார். இதெல்லாம் ‘டான்சி’யை விட மிக மோசமான மோசடியல்லவா?

‘ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய மூவர் தான் அதிகாரிகளிடம் பேசுகிறார்கள். அவர்கள்தான் ஆட்சி நடத்துகிறார்கள்’ என்று புலனாய்வு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. ‘நான் ஒருவன் தான் பவர் சென்டர்’ என்று சொன்னவர் பவர் இல்லாமல் இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!

‘கில்லி’ சரத்குமார் என்று சொல்லிக் கொள்ளும் அமைச்சர் உண்மையில் ‘பவுடர்’ சரத்குமாராக இருந்துள்ளார். அவர் ‘பவுடர்’ எடுப்பது வீடியோவாக வந்தது. அதன் பிறகும் அவரை அமைச்சராக வைத்துக் கொண்டுள்ளார் விஜய். இதை விட ஆணவம் வேறு இருக்க முடியாது. சரத்குமார் மீது நடவடிக்கை எடுத்தால் தனது நாற்காலி ஆடும் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்படித்தான் பல அமைச்சர்கள் தப்பி இருக்கிறார்கள். பலர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துவிட்டது. அவர்கள்தான் தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் விஜய்.

கொள்கைத் தலைவராக பெரியாரை அறிவித்தவர் ஆட்சியில், கட்சியில் நடப்பது அனைத்தையும் நான்தான் முடிவு செய்கிறேன் என்கிறார் ஜோசியர் ஒருவர். அவர் ஜெயலலிதாவை எவ்வளவு ஏமாற்றினார் என்பதும், அவர் எப்படி விரட்டினார் என்பதும் போயஸ் கார்டனை அறிந்தவர்கள் அறிவார்கள்.

கொள்கைத் தலைவராக அம்பேத்கரை அறிவித்தவர் ஆட்சியில், அம்பேத்கர் பெயர் நீக்கப்படுகிறது. ஆதி திராவிடர் என்ற அடையாளச் சொல்லையே காவு வாங்கிவிட்டார் விஜய். பட்டியலின மாணவர் வெளிநாடு சென்று படிக்க வழங்கப்படும் நிதியில் கை வைத்துவிட்டார். ஆதிதிராவிடர் நலத் துறை சார்பிலான நிதிகள் மற்ற துறைக்கு மடைமாற்றம் செய்யப்படுவதை பேராசிரியர் ஒருவர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை பதில் இல்லை.

ஒருவருக்கு வோட்டுப் போட்டு, அவருக்கு வாக்களித்தது தவறு என்று ஒரு மாத காலத்துக்குள் மக்கள் சொன்னதுதான் விஜய் வாங்கிய பட்டம் ஆகும். இதை வேண்டுமானால் அவர் சட்டையில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

கதையே தெரியாமல் படம் எடுப்பதைப் போல, தினந்தோறும் எதையோ உருட்டிக் கொண்டு இருப்பவருக்கு எதற்காக ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்?

பழிவாங்குவது ஒன்றைத் தான் விஜய் இதுவரை செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது, அனிதா ராதாகிருஷ்ணன் கைது, மார்க்கண்டேயன் கைது, தன்னை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் எழுதுபவர்கள் கைது, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு.. இது மட்டும்தான் நடக்கிறது.

இதைச் செய்வதற்கு ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் எதற்கு? ஒரு கோடியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் கட்டி அதன் வாசலில் பட்டு வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு ‘ஜனநாயகன்’ படத்தில் ரத்தம் வடிய வைத்திருக்கும் கருவியை வைத்திருந்தால் போதுமே?

banner

Related Stories

Related Stories