
அம்பேத்கர் அயல்நாட்டு உயர் கல்வி ஊக்க உதவித்தொகை விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் முன்னாள் அமைச்சர் கோ.வி.செழியன் பேசியதாவது:-
வானத்தில் பறக்கும் விமானத்தில் நாம் எப்போதாவது ஏறுவோமா என்று ஏங்கியிருந்த கிராமப்புற ஆதிதிராவிட மக்களுக்கு, குறிப்பாக நீலகிரி மாவட்டத் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகூட கனடா நாட்டிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயில வழிவகை செய்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அவரே இந்த அம்பேத்கர் உயர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துத் தந்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் தான் பாரதிதாசன் என்ற மாணவர் பயன்பெற்றுள்ளார். ஆனால், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சமூக நீதித்துறை அமைச்சர், 'இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுவிட்டது' என்று அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு, 'எனக்கு இன்னும் நிலுவைத்தொகை வரவில்லை' என்று மாணவர் பாரதிதாசன் தனது கருத்தை வெளியிட்டார்.
இது தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இத்திட்டத்திற்கான ஊக்கத்தொகை மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






