
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம், ஆண்டன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த குப்புசாமி மணியக்காரர் என்பவரால் கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளை பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.
இந்த சூழலில் இந்த இடம் தற்போது திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் தனிநபர்கள் 2 பேரின் பெயர்களில் ரூ.2 கோடிக்கு கடந்த மாதம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் நிலம் என்ற பதிவுகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) ஆவணங்கள் இருந்தபோதிலும், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான நிலையில், அந்த பணியிடத்திற்கு வந்த இணை சார்பதிவாளர் பத்திரம் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக ஆட்சியில் ஊழலே இருக்காது என்று வாய்கிழிய முதல்வர் விஜய் பேசிய நிலையில், தற்போது இந்து அறநிலையத்துறையில் நடந்த ஊழல் வெளியே தெரிந்துள்ளது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது தவெக அரசு.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்றும், முறைகேடு நடக்கவில்லை என்றும் தவெக-வினர் முரட்டு முட்டுக்கொடுத்து வந்த நிலையில், முறைகேடு நடந்தது உண்மை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷே உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலின் பேரில் இந்த வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (CBCID) விசாரணைக்கு நேற்று (ஜூலை 15) மாற்றப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என அறிவித்து நேற்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து அரசை விமர்சிப்பவர்கள் மீது தவெக அரசு வழக்குப்பதிவு செய்து வருகிறது. அரசை விமர்சித்தாலே வழக்குப்பதிவு, கைது என்று தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் தவெக, தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல், விமர்சித்தவர்களை கைது செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் அரசை விமர்சித்த இணையவாசி வினோத் சூர்யகுமார் என்பவரை நேற்று (ஜூலை 15) இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஏற்கனவே கருத்து சுதந்திரத்தை பறிக்கும் தவெக அரசுக்கு கண்டனங்கள் வலுத்த போதிலும், மேலும் மேலும் அதையே செய்து வருகிறது.






