
கரூர் கொடுந்துயரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய பொறுப்பற்ற பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். மக்களின் துயரத்தைக் கூட அவர் தனது இடைத்தேர்தல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்! என கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து சமூகவலைதளத்தில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவில், ”மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்!
மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கும், அந்த இருக்கையின் கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
‘ஓடு.. ஓடு..’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா’, ‘வெளுத்து விடுங்க’ என உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், இந்த மாநிலத்தின் நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கும் துர்நாற்றம் வீசும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
நீங்கள் பின்பற்றும் கொள்கைத்தலைவர்களின் பெயர்களைக் வெறும் அடையாள அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் அவர்களின் பண்பையாவது உங்கள் பேச்சில் வெளிப்படுத்துங்கள்.
‘வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன்’ என்ற உங்கள் திமிர் பிடித்த பேச்சு, ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல.
நாவடக்கம் என்பது உங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று! பொறுப்புணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்!” என விமர்சித்துள்ளது.






