
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆனந்தசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கீழமை நீதிமன்றம் வழங்கிய இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து உத்தரவிட்டது.
மேலும், தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பின்வருமாறு முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்:-
குற்றங்கள் கடுமையாக இருக்கும்போது நீதிபதிகள் நீதியின் வாளை எடுத்துச் சுழற்றத் தயங்கக் கூடாது. கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கருணை காட்டினால், அது சமூகத்திற்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும். குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் எப்போதும் முதுகெலும்பாகவே செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் உணர்வுகளை மலிவாகக் கருதிய குற்றவாளி, தனது மீதிக்காலத்தைச் சிறையில் கழிப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த வழக்கில் குற்றவாளி மூன்று குழந்தைகளின் உடல்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவர்களின் ஆன்மாவிற்கு எதிராகவும் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த உத்தரவு பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; மாறாக, நீதி வழங்கும் மற்றும் சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகும். இத்தகைய நபர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் நீதிமன்றப் பதிவாளர், இந்த வழக்கின் தீர்ப்பு நகல் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.






