
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எப்படியாவது, மாணவர்களின் அறிவையும் அறிவியல் நோக்கோடு அவர்கள் வளர்வதையும் தடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பள்ளி முதல் கல்லூரி வரைப் பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளைப் புகுத்தி வருகிறது.
மேலும் மாணவர்களின் அறிவுத்திறனைப் பண்டைய காலத்திற்குப் பின்நோக்கி இழுத்துச் செல்லும் வழிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள புதிய 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், பண்டைய இந்தியாவில் பெண்களின் நிலையை விளக்குவதற்காக மனுஸ்மிருதியின் 3.56-ஆவது ஸ்லோகம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
”பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தேவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; அவர்கள் எங்கு மதிக்கப்படவில்லையோ, அங்கு செய்யப்படும் அனைத்து புனித சடங்குகளும் பலனற்றுப் போகின்றன."
இதற்கு கல்வியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தி.முக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் "NCERT-இன் புதிய 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், பெண்களின் நிலையை விளக்குவதற்காக மனுஸ்மிருதி மேற்கோள் காட்டப்பட்டிருப்பது கவலைக்குரியது.
மனுஸ்மிருதி என்பது இந்திய வரலாற்றில் பெண்கள், சமூகநீதி மற்றும் சாதி அமைப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான ஒரு நூல்.
கல்வி என்பது விமர்சனச் சிந்தனையை வளர்க்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள் மூலம் ஒருதலைப்பட்சமான புரிதலை உருவாக்கக் கூடாது. இந்தியாவின் பன்முக வரலாறும், அரசியலமைப்பின் சமத்துவம் மற்றும் சமூகநீதி சார்ந்த அடிப்படைக் கொள்கைகளும் மாணவர்களிடம் முழுமையாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.






