
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன் (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரும், அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் சிறுமி, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரியவர இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை நடந்துள்ளது. பெண் வீட்டார் மீது பார்த்திபன் குடும்பத்தினர் பொறையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 29) இரவு சுமார் 3 மணி அளவில் இருவரும் சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை அந்தப் பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் கூறிய நிலையில், பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அங்கே இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக இளைஞர்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ஆணவக் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.






