
விருதுநகரில் சிலம்பப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கும் தனித்திறன் வாய்ந்த மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
அந்த மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இடம்பெற்றிருந்தது.
இதனைக் கண்டு அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அங்கிருந்த அதிகாரியிடம், "எனது துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி இது. புரோட்டாக்கால்படி முதலமைச்சர் பெயருக்கு அடுத்ததாக எனது பெயர் இடம்பெற வேண்டும். இதைப்பலமுறை சொல்லியாகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்?" என்று கடிந்துகொண்டார்.
உடனே அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர், "இனி இந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என அமைச்சரைச் சமாதானப்படுத்தினார். விருதுநகர் மாவட்ட தவெக அமைச்சர்களுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அரசு விழாவில் அதிகாரிகள் முன்னிலையிலேயே வெளிப்படையாக அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.






