
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி சரஸ்வதி. இன்று முற்பகல் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்."இங்கு ஏதேனும் வீடு வாடகைக்கு கிடைக்குமா?" என்று சரஸ்வதியிடம் விசாரிப்பது போல அந்த நபர் அருகில் நெருங்கியுள்ளார்.
பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, சத்தமிட்டுக் கூச்சலிட்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோடிய திருடனைச் சிறிது தூரம் துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் எடப்பாடி பகுதியில் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






