தமிழ்நாடு

“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”

கோவையில் நீட் மறுதேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவானதாதைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வு நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இதுபோன்றதொரு நிலையில், ஒன்றிய அரசின் அலட்சியத்தாலும் தேசிய தேர்வு முகமையின் அலட்சியத்தாலும் கோவையில் ஒரு மாணவியின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சியான செய்திதான் வந்துள்ளது.

ஆரம்பம் முதலே நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வரும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், ஒன்றிய அரசோ இதுவரை நம் கோரிக்கைக்கு தனது செவியை திருப்பவில்லை. இதன் தொடர்ச்சியாக நடைபெறும் தற்கொலைகள் இன்றளவும் குறைந்தபாடில்லை.

கோவை, குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை புதூர் பார்க் டவுன் நகரைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிரமாகப் படித்து தேர்வும் எழுதி இருந்தார்.

​நீட் தேர்வு எழுதி ஆவலோடு தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவிக்கு நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவை கடுமையான சோர்விலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. "மீண்டும் தேர்வு எழுதினால் என்னால் தேர்ச்சி பெற முடியுமா ? நினைத்த மதிப்பெண் கிடைக்குமா ?" என்ற அச்சம் நாளுக்கு நாள் அவரிடம் அதிகரித்து, கடுமையான மன உளைச்சலாக மாறி உள்ளது.

“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”

இதன் காரணமாக ஏற்கனவே தனது நீட் பயிற்சிக்காகத் தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு, தற்போது வருமானமின்றி தவிப்பதை எண்ணி அந்த மாணவி மேலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். ​இந்த நிலையில், இன்று (ஜூன் 17) அதிகாலை அனுகீர்த்தனா தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், "நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி ? விழிப்பேன் என்று தெரியவில்லை" என மன வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.

அதிகாலையில் இந்த வாட்ஸ்-அப் தகவலைப் பார்த்துப் பதறி அடித்து ஓடிவந்த உறவினர்கள், அனுகீர்த்தனாவின் அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது, அவர் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்துள்ளார்.

​உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு குளறுபடிகளால் கோவையில் மேலும் ஒரு மாணவியின் மருத்துவக் கனவு தற்கொலையில் முடிந்து உள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் கல்வி வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு நடந்த பிறகாவது ஒன்றிய அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கோ அல்லது நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முன்வருமா என்ற கேள்வி தான் ஓங்கி நிற்கிறது.

banner

Related Stories

Related Stories