தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து - முதலமைச்சர் விஜய் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது : அப்பாவு!

பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது.

தமிழ்த்தாய் வாழ்த்து -  முதலமைச்சர் விஜய் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது : அப்பாவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்துத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்படும். ஆனால், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற விழாவில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, த.வெ.க அமைச்சர்கள், 'அது ஆளுநரின் விழா என்பதால் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி பாடல் இசைக்கப்பட்டது; இனி அப்படி நடக்காது' என்று மழுப்பலாகப் பதில் அளித்தனர்.

ஆனால், புதிய அமைச்சர்கள் பதவியேற்பின்போதும், விசிக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தையே பிடித்தது.

இது குறித்துக் கேள்வி எழுப்பினால், 'ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்' என்று த.வெ.கவினர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, 'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்' எனக் கெஞ்சி இருக்கிறார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் அப்பாவு வெளியிட்டுள்ள பதிவில், ”மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடபட்டது.

தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.

இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.

இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories