
அண்மையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட முகுந்த் பாண்டியன் 18,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின்னர் கடந்த 10 நாட்களாகச் சென்னையில் இருந்த அவர், இன்று தனது தொகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது, கிருஷ்ணகிரியில் உள்ள 5 ரோடு ரவுண்டானா பகுதியில் 200-க்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் கூடி, சட்டமன்ற உறுப்பினர் முகுந்த் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், சட்டமன்ற உறுப்பினருக்கு மாலை மற்றும் பொன்னாடைகள் அணிவித்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
200-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், ரவுண்டானாவைச் சுற்றியுள்ள பழைய பேட்டை சாலை, சென்னை சாலை, பெங்களூரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் செல்லும் நகரின் மையப்பகுதிச் சாலை என்பதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர், காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.






