
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், மகளிர் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டக் கொண்டு வரப்பட்டது.
இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 மாதம் மாதம் வரவு வைக்கப்பட்டு வந்தது.
தேர்தல் அறிவித்துவிட்டால் இந்த உரிமைத் தொகை மகளிருக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கருதி, முந்தைய தி.மு.க அரசு கொடை நிதியுதவியுடன் சேர்த்து ரூ.5,000 தொகையை முன்கூட்டியே வங்கியில் வரவு வைத்து அவர்களை மகிழ்வித்தது.
இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிட்டத்தட்ட 1.31 கோடிப் பெண்கள் கடந்த 2 வருடங்களாகப் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் தாங்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருப்பதாக அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்தனர்.
ஏன் கணவனிடம் கைநீட்டி, 'வெளியே செல்ல வேண்டும், இந்தப் பொருள் வாங்க வேண்டும்' என்று காசு கேட்காமல், தாங்களே தங்களுக்குத் தேவையானதை வாங்கும் அளவிற்குப் பொருளாதார விடுதலையைப் பெண்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கி வந்தது.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை விமர்சித்துவிட்டு, தேர்தலில் ரூ.2,500 கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துவிட்டுத் தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய்.
ஆனால், ஆட்சியைக் பிடித்தவுடன் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, கடந்த 2 ஆண்டுகளாகத் திராவிட மாடல் அரசு வழங்கி வந்த ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்று நிறுத்தியுள்ளார் விஜய்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
நாளை ரூ.1,000 கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த 1.31 கோடி மகளிருக்கு முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், கடும் போராட்டத்திற்கு பிறகே தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனே விஜய் ஆட்சியில் அமர்ந்துள்ளார்.






