
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததைத் அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. சட்டப்பேரவையில் இக்கட்சிகளின் ஆதரவுடனே தனது பெரும்பான்மையை முதலமைச்சர் விஜய் நிரூபித்துள்ளார்.
த.வெ.க வெற்றி பெற்றவுடன், விஜய் கொடுத்த ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனப் பெண்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பேசியபோது, கஜானாவில் பணம் இல்லை எனக் கூறி அவர்களை ஏமாற்றினார்.
இதையடுத்து, திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைத் த.வெ.க அரசு தொடர வேண்டும் எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிபிஎம், சிபிஐ, விசிக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.
ஏன், நேற்று நடந்த சட்டமன்ற அவையில் கூட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? என்று 1.35 கோடி மகளிர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் மூலம் பயனடைந்த கல்லூரி மாணவர்களும் தங்களுக்கு இந்த மாதம் ரூ.1,000 வருமா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களைக் காக்கவைத்துவிடாதீர்கள்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ், ரூ.1,000 உதவித்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் த.வெ.க அரசு வரவு வைத்துள்ளது.






