
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கும் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்காததால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் இரண்டாக உடைந்துள்ள அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் பிரிவின் ஆதரவுடன் 144 வாக்குகளைப் பெற்று த.வெ.க அரசு தனது சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
இந்த பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவையில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் இதற்கு முதலமைச்சர் விஜய் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், குதிரை பேரம் குறித்து முதலமைச்சர் விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என தி.மு.க எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி வில்சன் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், ” தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசு பெற்ற 144 வாக்கெடுப்பு வாக்குகளில், 26 வாக்குகள் (25 அதிமுக அதிருப்தியாளர்கள் + 1 அமமுக உறுப்பினர்) சட்டப்படி செல்லாதவை.இந்த 26 வாக்குகளைக் கழித்தால்,த.வெ.க அரசுக்கு ஆதரவான வாக்குகளின் எண்ணிக்கை 118 ஆகும்.
சட்டமன்றத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் த.வெ.க கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளும், வாரியத் தலைவர் பதவிகளும் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறப்பட்டதாகக் குறிப்பிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு அவர் நேரடி உத்தரவு பிறப்பித்தார்.அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை பிரிவு 2(b)-ன் படி, எடப்பாடி பழனிசாமியின் இந்த உரை மிக முக்கியமான சட்ட ஆதாரமாகும்.
எடப்பாடி பழனிசாமியின் உரைக்குப் பிறகு, அதிருப்தி அ.தி.மு.க குழுவைச் சேர்ந்த வேலுமணி என்பவரைப் பேச சபாநாயகர் அனுமதித்தார்.தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்கு முரணாக, வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவினர் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.சபாநாயகர் அவசரமாக வாக்கெடுப்பு நடத்தாமல், சட்டமன்ற விதிகளின்படி குதிரை பேரக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரித்திருக்க வேண்டும்.அரசுக்கு எதிராகச் செயல்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது.
அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனும் தனது கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரத்தில் சிக்கியதாகக் குற்றம் சாட்டினார்.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்த குதிரை பேரத்திற்கு எதிராக அவையில் போராடினர்.அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுயநலத்திற்காகவும், பணத்திற்காகவும் மட்டுமே கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்களித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சபாநாயகரின் இந்த முடிவையும், அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளையும் எதிர்த்து ஆளுநரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முறையான ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தால், அந்த 26 வாக்குகளும் சட்டப்படி செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.உச்ச நீதிமன்றத்தின் 'ராஜாராம் பால்' தீர்ப்பின்படி, பணத்திற்காக வாக்களித்த உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளின், குறிப்பாக எடப்பாடி பழனிசாமின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் அவையில் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.
இந்த 26 அதிருப்தி வாக்குகள் நிராகரிக்கப்பட்டாலும், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க அரசு பெற்றுள்ள 118 வாக்குகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாதவை.பெரும்பான்மைக்குத் தேவையான இந்த 118 வாக்குகளின் பலத்தால் த.வெ.க அரசு தற்போதைக்குத் தப்பிப் பிழைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.






