தமிழ்நாடு

நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!

பாஜகவினர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர, நாட்டைச் சீரழிக்கக் கூடாது.

நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடியின், நேற்றைய பேச்சு நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்வது, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும், மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதையடுத்து, இந்த வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் இந்த நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி 'பா.ஜ.க' தான் என விமர்சித்துள்ளார்.

இது குறித்து அகிலேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், உண்மையில், இந்த நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி 'பா.ஜ.க' தான். பா.ஜ.க அரசின் கையில் இருந்து நிலைமை முற்றிலும் நழுவிவிட்டது போல் தெரிகிறது. தங்கம் வாங்க வேண்டாம் என்ற வேண்டுகோளை மக்களிடம் வைக்கக்கூடாது, தங்களின் ஊழல்வாதிகளிடம் தான் வைக்க வேண்டும். ஏனெனில், பொது மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தான் தங்கள் கருப்புப் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வருகிறார்கள்.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகுதான் ஞாபகத்திற்கு வந்ததா? தேர்தலின் போது பா.ஜ.க-வினர் ஆயிரக்கணக்கான தனி விமானங்களில் பறந்தார்களே, அவையெல்லாம் தண்ணீரில் ஓடினவா? அவர்கள் ஹோட்டல்களில் தங்கவில்லையா அல்லது சிலிண்டர் விளம்பரங்களில் இருப்பது போல சமைத்துச் சாப்பிட்டார்களா?பா.ஜ.க ஏன் தன் தேர்தல் பிரச்சாரத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே செய்யவில்லை? இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் பொதுமக்களுக்கு மட்டும்தானா?

அவசர காலங்களில் அரசாங்கம் தனது வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி மக்களைக் காக்க வேண்டுமே தவிர, பீதியைக் கிளப்பக்கூடாது.அரசாங்கத்தை நடத்தத் தெரியவில்லை என்றால், பாஜகவினர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர, நாட்டைச் சீரழிக்கக் கூடாது.

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை என பெரும் விலையைத் தந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் தொடங்கி இளைஞர்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள் என அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மை என்னவென்றால், பாஜக வெளிநாட்டுக் கொள்கையிலும் தோல்வி அடைந்துவிட்டது, உள்நாட்டுக் கொள்கையிலும் தோற்றுவிட்டது. தேர்தல் முடிந்து வாக்குகள் வந்தவுடனேயே பாஜகவின் குறைகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன."

பா.ஜ.க-வினர் தேர்தல் கால முறைகேடுகள் மூலம் அரசியலை அசுத்தப்படுத்திவிட்டார்கள்; வெறுப்புணர்வைப் பரப்புவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைச் சீரழித்துவிட்டார்கள்; பண்பாட்டையும் விழுமியங்களையும் தங்கள் நடத்தையால் பாழ்படுத்திவிட்டார்கள். மடாதிபதிகள் மற்றும் துறவிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மூலம் அவர்கள் மதத்தையும் விட்டுவைக்கவில்லை - இப்போது வந்து பொருளாதாரத்தை நினைத்து அழுகிறார்கள்.

இப்படி கலாச்சாரம், மதம், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் என ஒவ்வொரு துறையிலும் பாஜக நாட்டைச் சிதைத்துவிட்டது. தற்போதைய இந்த வேண்டுகோளுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் திடீரென வெடித்துள்ள இந்த ஆக்ரோஷத்தை பாஜகவால் எந்த தேர்தல் கால தந்திரத்தாலும் கட்டுப்படுத்த முடியாது; பாஜகவின் கதை இனி முடிந்தது.இன்று தேசம் சொல்கிறது: எங்களுக்கு இனி பாஜக வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories