
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வணிக ரீதியான சிலிண்டர் விலை கிட்டத்தட்ட 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.ஏற்கனவே உணவக உரிமையாளர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்குப் பேரிடியாக அமையும் வகையில் ரூ. 993 விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் LPG Price-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது West Asia War என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த LPG Price Hike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.






