தமிழ்நாடு

”அரிய வகை புற்றுநோய்.. டைட்டானியம் மூலம் வெற்றிகர சிகிச்சை.. அரசு மருத்துவமனை புதிய சாதனை!”

‘காண்ட்ரோசார்கோமா’ (Chondrosarcoma) என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு, சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நவீன சிகிச்சையளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

”அரிய வகை புற்றுநோய்.. டைட்டானியம் மூலம் வெற்றிகர சிகிச்சை.. அரசு மருத்துவமனை புதிய சாதனை!”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

மனித உடலின் ஒவ்வொரு அங்கமும் இயற்கையின் அதிசயம். அந்த அதிசயத்தில் ஒரு பகுதி சிதையும்போது, அதை மீண்டும் அதே பொலிவுடன் மீட்பது ஒரு கலை.

அப்படிப்பட்ட ஒரு சாதனையை மருத்துவ உலகே திரும்பிப் பார்க்கும் வகையில் நிகழ்த்தியுள்ளனர் சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள்.

கடலூரைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் புருசோத்தன் என்பவருக்கு மார்பெலும்பில் CHONDROSARCOMA என்ற ஒரு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரின் விலா எலும்புகள் மற்றும் நெஞ்சுப்பகுதியின் சுவர் வரை பரவியிருந்தது. பாதிக்கப்பட்ட விலா எலும்பு மற்றும் அதனைச்சுற்றியுள்ள மென்மையான திசுக்கள் அகற்றப்பட்டன. நுரையீரலையும் இதயத்தையும் பாதுகாக்கும் கவசமான விலா எலும்புகள், புற்றுநோய் பாதிப்பால் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும்போது, அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிறது.

இது சுவாசிப்பதிலும், உடல் அமைப்பிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, மருத்துவர்கள் தேர்ந்தெடுத்தது டைட்டானியம் எனும் மந்திர உலோகத்தை. இதன் உறுதி எஃகை விட வலிமையானது. உடலோடு ஒட்டும் தன்மை கொண்டது உடலின் இயற்கையான வளைவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கக்கூடியது என்பவை இதன் சிறப்பம்சங்கள்.

உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். என்றான் ஐயன் வள்ளுவன். நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மை, மருத்துவம் செய்யும் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து கற்றறிந்த மருத்துவர் செயல்பட வேண்டும் என்பதை எத்தனையோ நூற்றாண்டுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளான். அவனை அடியொற்றி, புற்றுநோயால் சிதைந்த ஒருவரின் மார்புக்கூட்டைச் சீரமைக்க, வெறும் மருந்துகள் மட்டும் போதாது என்றுணர்ந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், காலத்தினால் செய்த மிகப்பெரிய உதவியாக இந்த டைட்டானியம் விலா எலும்புப் பொருத்தலை நிகழ்த்தியுள்ளனர்.

”அரிய வகை புற்றுநோய்.. டைட்டானியம் மூலம் வெற்றிகர சிகிச்சை.. அரசு மருத்துவமனை புதிய சாதனை!”

இதற்கான சிகிச்சை குறித்து மருத்துவர் சுஜய் சுகிகார் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை வெறும் வெட்டுதலும் தைத்தலும் அல்ல; அது ஒரு சிற்பியின் செதுக்கல் போன்றது. பாதிக்கப்பட்ட எலும்புகளை அகற்றிவிட்டு, முப்பரிமாண முறையில் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட டைட்டானியம் சட்டகத்தை மருத்துவர்கள் அங்கு பொருத்தினார்கள். இயற்கையால் இழந்த ஒரு பகுதியை, செயற்கை கொண்டு மீட்கும்போது அதன் நேர்த்தி மிக முக்கியம்.

இந்த சிகிச்சையின் மூலம் பயனடைந்த பயனாளர் புருசோத்தமன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் பல இலட்சங்கள் செலவாகும் இத்தகைய உயர் ரக சிகிச்சைகள், இன்று தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சாமானியர்களுக்கும் சாத்தியமாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

”அரிய வகை புற்றுநோய்.. டைட்டானியம் மூலம் வெற்றிகர சிகிச்சை.. அரசு மருத்துவமனை புதிய சாதனை!”

நவீன தொழில்நுட்பமும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பும் இணைந்து ஒரு மனிதனின் சுவாசத்தை மீட்டுள்ளன அந்த நோயாளிக்கு இது ஒரு புதிய கவசத்தைப் போன்றது, என இச்சாதனையை நிகழ்த்திய மருத்துவக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

இனி அந்த நோயாளி சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும், நவீன மருத்துவத்தின் வெற்றியும், டைட்டானியம் தந்த உறுதியும் கலந்திருக்கும். இது வெறும் அறுவை சிகிச்சை அல்ல, அறிவியலும் அன்பும் இணைந்து எழுதிய ஒரு உயிர்க் கவிதை. இயற்கை கொடுத்த எலும்பு முறிந்தால் வலிக்கும், ஆனால், செயற்கை தந்த இந்த உலோகம் அந்த வலியையே வாழ்வாக்கியுள்ளது.

உறுதிமிக்க அறிவியலும், உள்ளம் கனிந்த மருத்துவமும் இணையும் இடத்தில் மரணம் தோற்றுப்போகிறது. இது கடினமான காரியம் என்று சோர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன் இந்த நவீன அறுவை சிகிச்சையைச் செய்து முடித்த மருத்துவர்களின் கரங்கள், இன்று ஒரு வாழ்வை மீட்டெடுத்த பொற்கரங்கள். சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் மகுடத்தில், டைட்டானியம் ஒரு வைரக்கல்லாக ஜொலிக்கிறது.

இது இன்று நிகழ்ந்த சாதனையல்ல தமிழ்நாடு அரசு மருத்துவமனையும் அதற்கான உட்கட்டமைப்புகளை அமைப்பதில், திராவிட மாடல் அரசு காட்டிய மக்கள் உடல்நலன் மீதான அக்கறையும் தான் முக்கிய காரணியாக உள்ளது. இந்திய அளவில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்றும் என்றென்றும் இந்தியாவிற்கு வழிகாட்டியாகவே இருக்கிறது.

banner

Related Stories

Related Stories