
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13-04-2026) இராணிப்பேட்டையில் நடைபெற்ற 2026 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
இராணுவப்பேட்டையாக இருந்த இராணிப்பேட்டைக்கு நான் வந்திருக்கிறேன். ஆற்காடு சீரக சம்பா பிரியாணி, மக்கன் பேடா என நவாப்களின் உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற ஆற்காடு அமைந்திருக்கும் மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். தக்கோலம், ஆற்காடு என்று நிறைய போர்களை பார்த்த மண், இந்த மண்! அப்படிப்பட்ட மண்ணில் இருந்து, 2026 ஜனநாயகப் போரில், டெல்லி அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற உங்கள் ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன்.
சாதாரணப் பகுதியா இது? ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக உருவாக்கப்பட்ட வாலாஜாபேட்டை இங்குதான் இருக்கிறது. அதுமட்டுமா, தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவையும், சென்னை – ராயபுரத்தில் இருந்து அம்மூர் வாலாஜா சாலைக்குதான் விடப்பட்டது.
அண்ணல் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவிலேயே ராணிப்பேட்டையில்தான் பதிமூன்றே நாளில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது! சோளிங்கர் நரசிம்ம பெருமாள் திருக்கோயில், I.N.S. ராஜாளி கடற்படை விமானத் தளம், மகேந்திரவாடி, ஆற்காடு கோட்டை என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ராணிப்பேட்டைக்கு சிறப்பான ஆட்சி தொடர ஆதரவு கேட்டு நான் வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் பாதி மாவட்டங்களை நான் கவர் பண்ணிவிட்டேன்!திராவிட மாடல் 2.0-வுக்கு எல்லாரும் ‘OK’ சொல்லிவிட்டார்கள். ராணிப்பேட்டையும் ரெடியா? ரெடி (மக்கள்). நன்றி! இப்போது உங்கள் அனுமதியோடு நம்முடைய வெற்றி வேட்பாளர்களை இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அறிமுகமான ஆட்கள்தான், இருந்தாலும் மரபுபடி அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஆர். காந்தி. நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்தி, ஐந்தாண்டு காலம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருந்து, சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அடுத்து, ஆற்காடு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தம்பி ஈஸ்வரப்பன் அவர்கள். ஆற்காடு நகர்மன்றத் தலைவராக இருந்து, சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர். சட்டமன்றத்தில் பேசும்போது, தனக்கென தனிபாணியில் பேசுபவர். எல்லாரும் ரசிக்கும்படியாக அவரின் பேச்சு இருக்கும். ஆற்காடு தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்.
அடுத்து, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஏ.எம். முனிரத்தினம் அவர்கள். முனிரத்தினம் அவர்கள், நீண்டகால அரசியல் பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர். மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். சோளிங்கர் பேரூராட்சித் தலைவராக இருந்தவர். சோளிங்கர் மக்கள் மீண்டும் அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழில் கரோலின். முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலை அவர்களின் மகள். நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களால் வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர். உச்சநீதிமன்றம், பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கறிஞராக இருந்தவர், மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார். அவருக்கு, பானை சின்னத்தில் நீங்கள் வாக்கினை வழங்கிட வேண்டும். நம்முடைய நான்கு வேட்பாளர்களின் வெற்றியும் உறுதியா?
உறுதி (மக்கள்).
நன்றி! வேட்பாளர்கள் உட்காரலாம். உங்களுக்கு சீட் இப்போதே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இந்தியாவுக்கே மாடலாக அமைந்திருக்கும் சாதனைத் திட்டங்களையும், உங்கள் மாவட்டத்துக்கான வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுத்துவிட்டுதான் உங்கள் ஆதரவை உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன். அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் இப்போது நான் சொல்கிறேன்.

ராணிப்பேட்டை இளைஞர்களுக்கு வர பிரசாதமாக அறிவுசார் மையம் திறக்கப்பட்டிருக்கிறது. பல நூறு பேர் போட்டித் தேர்வுகளுக்கு இங்கு வந்து தயார் ஆகிறார்கள்.
உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஆற்காடு - ஆரணி புறவழிச்சாலை நிறைவேற்றப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
பழுதடைந்த ஆற்காடு பேருந்து நிலையக் கட்டடம் அகற்றப்பட்டு, புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் – வெள்ளகுளம், பென்னகர், வாழைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கிறது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை போவதற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள், சாலை விரிவாக்கம், தெரு விளக்குகள், புதிய கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது.
ஆற்காடு தொகுதியில் நிறைய ஏரிகளை சீரமைத்திருக்கிறோம்.
ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டையில் வாரச் சந்தை வணிக வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. மேல்விஷாரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம். வாலாஜாப்பேட்டை – திமிரியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது.
ராணிப்பேட்டையில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி மகளிர் விடுதியை திறந்து வைத்திருக்கிறேன். பேரூராட்சியாக இருந்த சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்வு. சோளிங்கர் புதிய பேருந்து நிலையப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. சோளிங்கர் மேல்வெங்கடாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடம்.
பாலாறு அணைக்கட்டு 200 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கூடுதல் கட்டடம்.
மேல்பாக்கத்தில் பழங்குடியினருக்காக 41 குடியிருப்புகள் திறக்கப்பட்டிருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் மேல், கடந்த பிப்ரவரி மாதம், பனப்பாக்கம் சிப்காட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும், டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட்-ரோவர் நவீன வாகன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தேன். தொடங்கி மட்டுமா வைத்தேன். அங்கு தயாரிக்கப்பட்ட முதல் ரேஞ்ச்ரோவர் காரில், டாடா குழுமத் தலைவரைப் பக்கத்தில் உட்கார வைத்து, நானே கார் ஓட்டி இருக்கிறேன். அதையெல்லாம் பார்த்தீர்களா? இந்தத் தொழிற்சாலை வந்ததால், உலகமே இன்றைக்கு ராணிப்பேட்டையை உற்று நோக்க தொடங்கியிருக்கிறது.
அதுமட்டுமா, பனப்பாக்கம் சிப்காட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் தைவான் கம்பெனியின் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால், 85 விழுக்காடு கிராமப்புற பெண்களுக்குதான் இங்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது.
இப்படி, ராணிப்பேட்டையின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பார்த்து பார்த்து திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் இதுபோன்று நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லித்தான் இன்றைக்கு வாக்குகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு மாவட்டத்தையும் வளர்த்த காரணத்தால்தான், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடும் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது.
அதுவும் எப்படி? ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவு இல்லாமலேயே இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம். பா.ஜ.க. அரசு பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியும், அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களால் இந்த வளர்ச்சியைக் காண்பிக்க முடியவில்லை. நம்முடைய வீடுகளில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், “படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்” என்று சொல்லுவார்கள். அதுபோன்று, திறமையிருந்தால் தடைகளை மீறியும் சாதிக்கலாம் என்பதற்கு திராவிட மாடல்தான் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைக்கு விளங்குகிறது!
“தமிழ்நாடு வளர்ந்தால், அது இந்தியாவுக்கான வளர்ச்சிதானே” என்று பா.ஜ.க. நினைக்கவில்லை. அந்த அளவுக்கு நம்முடைய வளர்ச்சி மீது பொறாமை! தமிழர்களின் அடையாளமே மொழிதான்! தமிழர், தமிழ்நாடு, இப்படி நம்முடைய இனம், நாம் வாழும் மாநிலம் என எல்லாமே மொழியை அடிப்படையாக கொண்டதுதான்! அப்படிபட்ட மொழியையே அழித்துவிட்டால், தமிழர்களை எளிதாக அடிமைப்படுத்திடலாம்; தமிழர் பண்பாட்டையே அழித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அதனால்தான், செம்மொழித் தமிழை அழிக்க, மும்மொழித் திட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அராஜகம் செய்கிறார்கள்.
ஒன்றிய அரசின் 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி நிதி வேண்டும் என்றால், இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். 2 ஆயிரம் கோடிக்காக தமிழர்களின் சுயமரியாதையை அடமானம் வைக்க, நான் ஒன்றும் காலில் விழுந்து பதவி வாங்கிய பழனிசாமி இல்லை;
மிசாவுக்கே அசராமல் எதிர்த்து நின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மிசாவுக்கே பயப்படாதவன், அமித்ஷாவுக்கா பயப்படுவேன்! நான் மக்களை சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.
அதனால், என்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குதான்! மாநில உரிமையை அடகு வைத்து பதவியில் நீடிக்க வேண்டும் என்றால், அப்படி ஒரு பதவியே வேண்டாம் என்று சொல்லி, நெருக்கடி காலத்தில் ஆட்சியையே இழந்த கலைஞரின் கொள்கை வாரிசுகள் நாங்கள்! நம்முடைய உரிமை முழக்கம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; டெல்லி நாடாளுமன்றத்திலும் இன்றைக்கு ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், நம்மைப் பார்த்து மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அதனால்தான், இவர்களை இப்படியே விட்டு வைக்க கூடாது என்று, தொகுதி மறுவரையறையை கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. சமைக்க சிலிண்டர் இல்லாமல், குடும்பங்களும் – ஹோட்டல்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆட்டோ ஓட்டுநர்கள், வண்டி ஓட்டுவதற்கு கேஸ் கிடைக்காமல் தவிக்கிறார்கள், புலம்புகிறார்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்து, டேபிளுக்கு அடியில் தவழ்ந்த பழனிசாமி போன்று இப்போது மொத்தமாக படுத்துவிட்டது. அதையெல்லாம் கவனிக்காமல், தேர்தலுக்கு நடுவில் மக்களை திசை திருப்புவதற்காக, தொகுதி மறுவரையறையை இப்போதே நடத்தியாக வேண்டும் என்று, பா.ஜ.க. அரசு திட்டமிட்டு துடி துடிக்கிறது. இந்திய அரசியலையே மாற்றியமைக்கப் போகும் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இது!
ஆனால், இதை எப்படி பண்ணப் போகிறார்கள்? என்ன திருத்தம் பண்ணப் போகிறார்கள்? இப்படியான நம்முடைய எந்தக் கேள்விக்கும் விளக்கம் அளிக்க மறுக்கிறார்கள். இவர்கள் இப்படி ரகசியமாக மறைத்து பண்ணுகிறார்கள் என்றால், அதில் கண்டிப்பாக பெரிய சதித் திட்டம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்!
இதனால், “தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் உயரும்” என்று, அடுத்த ஏமாற்று வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதில்தான், பெரிய ஆபத்தே ஒளிந்திருக்கிறது.
ஆற்காட்டில் இருந்து எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்? உங்களுடைய ஊரில் மக்கன் பேடா வாங்கினால், அதற்குள் பாதாம், முந்திரி, திராட்சை எல்லாம் ஒளித்து வைத்திருப்பார்கள். சரிதானே? அதுபோன்று, இந்தத் தொகுதி மறுவரையறைக்குள், நமக்கான ஆபத்தை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.
எப்படி என்று சொல்கிறேன்… நன்றாக கவனியுங்கள். தமிழ்நாட்டைவிட - உத்தரப்பிரதேசத்துக்கு இப்போது 41 தொகுதிகள் அதிகமாக இருக்கிறது. இதுவே, பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறையை கொண்டுவந்துவிட்டால், இந்த வித்தியாசம் 61-ஆக உயர்ந்துவிடும்.
இப்படி ஒட்டுமொத்தமாக, தென் மாநிலங்களுக்கும் - வட மாநிலங்களுக்குமான இடைவெளியை அதிகரித்து, இதுமூலமாக நாடாளுமன்றத்தில் நம்முடைய குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். இந்தியா மொத்தத்தையும் பாதிக்கும் முடிவு இது. ஆனால், மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் அவசர அவசரமாக இதை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.
அதுவும் இது தேர்தல் காலம். சாதாரண மக்களுக்கே எத்தனை கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதிக்கிறார்கள்? ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு ஏன் எந்தக் கட்டுப்பாடும் இல்லை? எப்படி, 5 மாநில தேர்தலுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை அவர்கள் கூட்டுகிறார்கள்? ஏன், தேர்தல் முடிந்து 29-ஆம் தேதிக்கு பிறகு கூட்டினால் என்ன? எதுக்கு இந்தப் பதற்றம்? பா.ஜ.க-வின் இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மரியாதைக்குரிய சோனியா காந்தி அம்மையார் அவர்கள், தி ஹிந்து பேப்பரில், இன்றைக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர்கள் சொல்லியிருப்பதை சுருக்கமாக உங்களுக்காகச் சுட்டிக் காட்டுகிறேன்.

முதலில், பெண்கள் இடஒதுக்கீட்டை எதற்காக எந்தத் தேவையும் இல்லாமல் தொகுதி மறுசீரமைப்போடு முடிச்சு போடுகிறீர்கள்? பா.ஜ.க. நினைத்திருந்தால் 2024 தேர்தலிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கலாம். எதிர்க்கட்சிகளான நாங்களும் அதைத்தானே கேட்டோம்.
இப்போது தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில், எதற்கு இதை பண்ண வேண்டும்? “ஜூலை மாதம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்த பிறகு, பொறுமையாக இதை செய்யலாமே... இப்போது என்ன அவசரம்? உங்களுடைய தலை மேல் வானம் இடிந்து விழுந்திடுமா என்ன?” என்றும் சோனியா காந்தி அவர்கள் கேட்டிருக்கிறார். அவர்கள் கேட்டிருப்பது 100 சதவீதம் சரியான கேள்விதான். நாட்டு மக்கள் அனைவரும் கேட்கும் கேள்விதான். இதையெல்லாம் விட முக்கியமாக ஒரு கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்.
ஒன்றிய அரசு சொன்னதை மதித்து, குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தி, குறைவாக குழந்தை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள்.
நாட்டிற்கு நல்லது செய்த அவர்களுக்கு, தண்டனை கொடுப்பது போன்றது இது. தொகுதி மறுவரையறை எனும் பெயரில் அவர்களின் நாடாளுமன்ற வலிமையை - அரசியல் வலிமையை குறைக்கக் கூடாது என்று அழுத்தமாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு பாதிக்கக் கூடாது என்று தி.மு.க. சொல்வதை, அன்னை சோனியா காந்தி அவர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து பேசுகிறார்கள். இங்கேயும் ஒருவர் இருக்கிறாரே? மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! “அவர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்?” என்று மக்கள் கேட்கிறார்கள்.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் நமக்கு ஆயிரம் அரசியல் விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த அம்மையார் உயிருடன் இருந்திருந்தால், தொகுதி மறுவரையறை போன்று, மாநில உரிமைகளைப் பறிக்கும், தமிழ்நாட்டை பாதிக்கும் விஷயத்தில் தி.மு.க.-வைப் போன்றே நிச்சயமாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பார்.
அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி., நீட் போன்றவற்றை அவர் கடுமையாக எதிர்த்தார். ஏன், அவர் ஒரு வார்த்தை சொன்னாரே, “குஜராத் மோடியா, இந்த லேடியா?” என கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு அவருடைய அ.தி.மு.க-வின் நிலைமையைப் பாருங்கள். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி, தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினையில்கூட பா.ஜ.க-வை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் இருக்கிறது.
அம்மையார் ஜெயலலிதா அவர்களை, ‘அம்மா... அம்மா’ என்று சொல்லிவிட்டு, தமிழ்நாட்டிற்கு ஆபத்து வரும்போது இப்படி சும்மா இருக்கிறீர்களே? இது நியாயமா பழனிசாமி அவர்களே... இது அவர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா... ‘மம்மி’ மறைந்த பிறகு, பழனிசாமி அந்தக் அ.தி.மு.க.வை ‘டம்மி’ ஆக்கிட்டார். இதுதான் உண்மை!

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் டெல்லியின் படையெடுப்பை தடுத்து நிறுத்தும் ஒரே அணி! டெல்லி அணியின் அஜெண்டா என்ன? மாநில அரசுகளை ஒழிப்பது, தமிழை அழிப்பது, சிறுபான்மையினரை முடக்குவது, இந்தியைத் திணிப்பது, சமஸ்கிருதத்தை புகுத்துவது, ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளில் இதைத் தாண்டி வேறு ஒன்றும் அவர்கள் செய்யவில்லை.
ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு வெறும் ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும், எல்லா மாநிலங்களும் பின்பற்றும் முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம்.
இதனுடைய அடுத்தகட்டமாகத்தான், 2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். சாதாரண அறிக்கை அல்ல அது, சூப்பர்ஸ்டார் அறிக்கை! “சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தைகள்கூட சொல்லும்”. இப்பொழுது நம்முடைய சூப்பர்ஸ்டாரில் அடங்கியிருக்கும்,
சூப்பர் ஹிட் அறிவிப்புகளை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். முதலில் இல்லத்தரசி திட்டம்! ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்! எட்டாயிரம் (மகளிர்)! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை புதிதாதகவும் வாங்கிக் கொள்ளலாம்;
இல்லையெனில், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். என்னென்ன பொருட்கள்?
வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என்று இவற்றில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் எதை வாங்கலாம் என்று வீட்டுக்காரரிடம் கேட்காதீர்கள். எதாவது சொல்லி, உங்களை குழப்பிவிடுவார்கள். எதாவது பிரச்சினை செய்தார்கள் என்றால், “அண்ணனிடம் சொல்லிவிடுவேன்” என்று சொல்லுவிடுங்கள். இது முழுக்க முழுக்க உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கும் திட்டம். பெண்கள்தான் டிசைட் செய்ய வேண்டும். எப்படி தலைவர் கலைஞர் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ, அவருடைய மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் 2 ஆயிரம் ரூபாய். இப்போதே பெண்கள் எல்லோரும் கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு 3 ஆயிரம், பிப்ரவரியில் சொல்லாமலேயே 5 ஆயிரம், ஆகமொத்தம் 8 ஆயிரம். அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் 8 ஆயிரம்.
“எட்டு + எட்டு! உதயசூரியனுக்குத்தான் எங்கள் ஓட்டு!” என பெண்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். அதனால், நம்முடைய வெற்றியும் இந்த முறை யாரும் எட்டாத உயரத்துக்கு போகப் போகிறது.
இதுமட்டுமல்ல, கல்லூரிக்குப் போகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன், உதவித்தொகையும் ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக வழங்கப் போகிறோம். நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும். காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். ஆயிரம் வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும்.
அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக 10 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப் போகிறோம்.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்க, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும். பிசினஸ்-மேன் மாதிரி, ‘பிசினஸ்-வுமன்’-களை உருவாக்குவதற்காக, சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க, எந்த சூரிட்டியும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
BC, MBC, சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆகியோருக்கும், தொழில் தொடங்க கடன் பெறும் உச்சவரம்பு, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
நெசவாளர்கள் நிறைய இருக்கும் மாவட்டம் இது. நெசவாளர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் 10 கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
50 கைத்தறிக் குழுமங்கள் அமைக்கப்படும். 10 ஆயிரம் கைத்தறிகளை 90 விழுக்காடு மானியத்துடன் நவீனப்படுத்துவோம்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த வடக்கு மண்டலத்தில், தொழில் வாய்ப்புகளை கண்டறிந்து, பொது சேவை மையங்கள் அமைக்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம் பகுதியில் ஒருங்கிணைந்த பெருங்குழுமம் அமைக்கப்படும். பணியாளர்கள் தங்குவதற்கான ஹாஸ்டல் அமைக்கப்படும். மக்கள், உங்களுக்கு மகிழ்ச்சியா? எம்.பி.-ஆக இருக்கும் ஜெகத்ரட்சகனுக்கு மகிழ்ச்சியா? இப்போது நான் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறி, வட மாவட்டங்கள் தற்போது கண்டுவரும் முன்னேற்றம் தொடர, தமிழ்நாடு மென்மேலும் வளர, அரசியல் விருப்பு வெறுப்புகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, நீங்கள் எல்லாரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும். ஏதோ, நான் முதலமைச்சர் ஆகவோ - 30 பேர் அமைச்சர் ஆகவோ - நம்முடைய கூட்டணியில் 200 பேர் MLA ஆகவோ - இதை நான் சொல்லவில்லை. தமிழ்நாட்டைக் காக்க கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். ஏழாவது முறையும் நாம்தான். ஏன், இனி எப்போதும் நாம்தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதற்கு, ராணிப்பேட்டை தொகுதியில் காந்தி அவர்களுக்கும்,
ஆற்காடு தொகுதியில் ஈஸ்வரப்பன் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதேபோன்று, சோளிங்கர் தொகுதியில் அன்புக்குரிய என்னுடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தியின் அன்பைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத்தினம் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அரக்கோணம் தொகுதியில் அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆதரவு பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழில் கரோலின் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் வழங்குவோம்.
நாடு வளம் பெற, நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற
முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!






