
நாட்டையே உலுக்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான்டேவிட்டின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதேபோல முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து உத்தரவை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டன.
அவ்வாறு சென்னையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசு செய்யும் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது தவறு என்றும், அதற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி, அரசின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதேபோன்று மதுரையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.
ஒரே விவகாரத்தில் இரு வேறு தீர்வுகள் காணப்பட்டதால், அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ உள்ள அதிகாரம் தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் விசாரணை நடைபெற்றபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது என வாதிட்டனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவை செய்யும் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த நிலையில், முன் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முன்கூட்டியே விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு குறித்த அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறி, அதனால் அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.






