
இன்று ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இம்மாற்றங்கள் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும், குறிப்பாக நிதிநிலையையும் நேரடியாக தொடர்புடையவை. அதில், வருமான வரி விதிகள் முதல் எரிபொருள் விலைகள், வங்கி சேவைகள், ரயில் பயணம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரை பல துறைகளில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
1961 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வருகிறது. இதில் “முந்தைய ஆண்டு” மற்றும் “மதிப்பீட்டு ஆண்டு” போன்ற முறைகள் நீக்கப்பட்டு, ஒரே “வரி ஆண்டு” என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறும் தனிநபர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக எரிபொருள் துறையில், வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றப்படுவதால், ஏப்ரல் 1 முதல் புதிய விலை அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வீட்டு உபயோகப் பயன்பாட்டு சிலிண்டரில் எந்த விலை மாற்றமும் இல்லை. ஒருவேளை தேர்தல் காரணமாகக் கூட இந்த விலை மாற்றம் நிகழாமல் இருக்கலாம். இதேபோல் சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான டர்பைன் எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வணிகப்பயன்பாடு சிலிண்டர்கள் விலையேற்றம் கண்டுள்ளன.
அடுத்ததாக வங்கி சேவைகளிலும் சில மாற்றங்கள் வருகின்றன. ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதில் இலவச வரம்பு குறைக்கப்பட்டு, அதற்குப் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளன. மேலும், சில டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கடுத்ததாக பான் அட்டை விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இனி பான் அட்டைக்கான விண்ணப்பங்களில் ஆதார் மட்டுமே பிறந்த தேதி ஆதாரமாக ஏற்கப்படாது. அதற்குப் பதிலாக 10ஆம் வகுப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள், ரூ.5 லட்சத்திற்கு மேல் வாகன வாங்குதல், உயர்நிலை ஹோட்டல் முன்பதிவு மற்றும் ரூ.20 லட்சத்திற்கு மேல் சொத்து பரிவர்த்தனைகளில் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான விதிகளிலும் மாற்றங்கள் சில மாற்றங்களை செய்துள்ளது ரயில்வே துறை. அதன்படி பயணச்சீட்டை 72 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால் அதிகபட்ச தொகை திரும்ப கிடைக்கும். 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 8 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% கட்டணம் பிடிக்கப்படும். 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது. மேலும், பயணிகள் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன் வரை தங்களது Boarding Point-ஐ மாற்றிக் கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரயிலில் பயணிகள் பயணித்த தூரத்தின் அடிப்படையில் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி பெறவோ அல்லது இலவச டிக்கெட் பெறவோ முடியும். கூடுதலாக, இலவச உணவு மற்றும் லவுஞ்ச் சேவைகளும் வழங்கப்படலாம். இந்த திட்டம் முதற்கட்டமாக பிரீமியம் ரெயில்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இனி அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் இரு படிநிலை அங்கீகாரம் (2FA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்துவமான பாதுகாப்பு குறியீடு உருவாக்கப்பட வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாததால் மோசடி ஏற்பட்டால், சேவை வழங்குநரே பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் சட்டங்களில் முக்கியமான மாற்றமாக, ஒரு பணியாளர் வேலைவிடும் போது அல்லது பணிநீக்கம் செய்யப்படும் போது, அவருக்கான சம்பளம், அலவன்ஸ், போனஸ் உள்ளிட்ட அனைத்து நிலுவை தொகைகளும் இரண்டு வேலை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 1) முதல் சுங்கச்சாவடி கட்டணங்களிலும் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை மற்றும் லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம். மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில், ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் பொதுமக்களின் செலவுகளிலும் சேமிப்பிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சில மாற்றங்கள் நன்மை தரக்கூடியவையாக இருந்தாலும், சில மாற்றங்கள் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த புதிய விதிகளை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம்.






