
சேலம் கருப்பூர் அருகே உள்ள மூங்கில் பாடி பகுதியை சேர்ந்தவர் சொர்ணா. பட்டதாரி பெண்ணான இவருக்கும், அதே பகுதியை அதிமுக பிரமுகர் கோவிந்தசாமி என்பவரின் மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இந்த சூழலில் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது சொர்ணாவுக்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகரான தனது மாமனார் கோவிந்தசாமி மற்றும் ஒன்றிய அரசின் அலுவலரான மாமியார் பிரேமா ஆகியோரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் தங்கள் மகன் செய்த செயலுக்கு பதிலளிக்காமல், மாறாக அந்த பெண்ணை இருவரும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இளம்பெண்ணிடம் வரதட்சணையாக வீடு ஒன்று கேட்டும் அடித்து உள்ளனர். தொடர்ந்து அவரை துன்புறுத்தியதோடு, அவரது 5 வயது மகனையும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அறிந்த கணவர் சக்கரவர்த்தி, மாமனார் கோவிந்தசாமி, மாமியார் பிரேமா ஆகிய மூவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூடான சாப்பாட்டை எடுத்து அவர் மீது கொட்டி துன்பறுத்தியுள்ளனர். இதனால் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில், நேற்று (மார்ச் 23) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சொர்ணா கூறுகையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டியதால் தன்னை, தனது மாமனார், மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தி வருவதாகவும், பெற்றோர் இல்லாத தமக்கும், தனது 5 வயது குழந்தைக்கும் உணவு கூட வழங்காமல் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியாக வேலைக்குச் செல்ல முடியாத வகையில், தனது கல்வி சான்றிதழ்களை அவர்கள் எடுத்து வைத்துள்ளதாகவும், தனது மாமனார் அதிமுகவில் இருப்பதாலும், சின்ன மாமனார் மூங்கில் பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பதாலும் உரிய நியாயம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.






