
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு‘ சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஐந்து ஆண்டு கால சாதனைகளை விளக்கும் “மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-26)” சாதனை மலரினை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறத்தக்க வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், உங்க கனவ சொல்லுங்க, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்;
அன்புக்கரங்கள், காக்கும் கரங்கள், அன்புச் சோலை, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், “உலகம் உங்கள் கையில்” மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், மக்களுடன் முதல்வர், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48;
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி, இல்லம் தேடிக்கல்வி, ஊட்டச் சத்தை உறுதி செய், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், முதல்வர் மருந்தகம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியடைந்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஐந்தாண்டு நிறைவடைந்ததையொட்டி, கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் துறை வாரியாகத் தொகுத்து, தமிழ்நாடு அரசு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் ’தமிழரசு’ சார்பில் “மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-26)” என்ற ஐந்தாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இச்சாதனை மலரில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ”தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை”, புலவர் முத்துவாவாசி எழுதிய “நீதிக்கட்சிக் காலம் முதல் நீண்டுவரும் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி”;
ஊடகவியலாளர் மூ.அப்பணசாமி அவர்கள் எழுதிய “நகர்ப்புற வளர்ச்சிக்கு இணையான சமச்சீர் ஊரக வளர்ச்சி”, மூத்த பத்திரிகையாளர் எம். ரமேஷ் அவர்கள் எழுதிய “பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்”, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஸ்ரீராம் சர்மா அவர்கள் எழுதிய “புண்ணியம் செய்வார்க்கு பூ உள (இந்து சமய அறநிலையத்துறை)” போன்ற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் அவர்கள் எழுதிய “குறையொன்றுமில்லை (முதல்வரின் முகவரி)”, எழுத்தாளர், சிறப்புக் கல்வியாளர், குழந்தைகள் நல உளவியாளர் இலட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய “மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிர்விக்கும் அரசு”, தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ந.கவிதா அவர்கள் எழுதிய “பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” என்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக முதன்மை ஒருங்கிணைப்புப் பதிப்பாசிரியர் முனைவர் தி. பரமேசுவரி அவர்கள் எழுதிய “நிற்க அதற்கு தக (பள்ளிக் கல்வித்துறை)”, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக எழுத்தாளர் வெற்றிச்செல்வன் எழுதிய “இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்”, வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் எழுதிய “கொள்கை வழி அரசு”;
ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி அவர்கள் எழுதிய ”இளைஞர் ஏக்கம் உடைத்து ஊக்கம் படைத்த திராவிட மாடல்”, எழுத்தாளர் (விளையாட்டு) தினேஷ் அகிரா அவர்கள் எழுதிய ”விளையாட்டிலும் சமூக நீதி: எல்லாருக்கும் எல்லாம்”, நாவலாசிரியர் சிவக்குமார் முத்தையா அவர்கள் எழுதிய ”சமூக நீதியின் சாதனைகள்” ஆகிய கட்டுரைகளும் மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், திட்டங்களின் பயன்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.






