
தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், மொழி வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் பல்வேறு வகையான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் திராவிட மாடல் அரசை வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனை பறைசாற்றும் வகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான உயர்கல்வி சேர்க்கை குறித்த தரவை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு.
அதில் 2024 - 25 கல்வியாண்டில் பெண்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதம் 76%-ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் உயர்கல்வி பெறுவது அதிகமாக இருக்கிறது என்ற பெருமைக்குரிய தகவல் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது,
“எல்லோருக்கும் மகிழ்ச்சியான, பெருமிதமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே பெண்களின் உயர்கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில் தான் அதிகம் என ஒன்றிய அரசே பாராட்டியுள்ளது.
பெண் கல்வி விகிதத்தை உயர்த்த புதுமைப் பெண் திட்டத்தை நாட்டிற்கே முன்னோடியாக கொண்டுவந்தார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பதை இப்போது ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய ஒன்றியத்தின் பள்ளிக் கல்விக்கான தகவல் அமைப்பே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021 - 22 கல்வியாண்டில் 49.8 விழுக்காடு இருந்த பெண்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம், புதுமைப்பெண் உள்ளிட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு, 2024 -25 கல்வியாண்டில் 76 விழுக்காடாக அதிகரித்து இந்தியாவிலேயே முதலிடத்தை அடைந்துள்ளது தமிழ்நாடு என தெரிவித்துள்ளது.
இதுதான் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடலின் உண்மையான வெற்றி. திராவிட மாடல் 2.O-ல் 100% பெண்கள் உயர்கல்வி பெறுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்வார்.
தமிழ்நாட்டு பெண்கள் தரணியை ஆளப்போகிறார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அனைவருக்கும் வாழ்த்துகள்.






