
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு மேற்குப் பகுதிக்கான 30 இளைஞர் அணி மன்றங்களை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19.2.2026 அன்று திறந்து வைத்தார்.
சட்டமன்றம்-நாடாளுமன்றம் நுழையும் முன்பே, வீதிதோறும் மன்றங்கள் அமைத்து, அரசியல் கருத்துக்களைப் பரப்பி, மக்களுக்கு தொண்டாற்றிய பேரியக்கம், நம் தி.மு.கழகம். பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர்-இன்றைய கழகத் தலைவர் ஆகியோர் வழியில், மீண்டும் மன்றம் அமைக்கும் மரபைத் தொடங்குவதில், பெருமைகொள்கிறது கழக இளைஞர் அணி. மாவட்டம், மாநகரம், மாநிலம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய கழக அமைப்புகளில், இளைஞர் அணிக்கு ஏற்கெனவே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகள், நகர-பகுதி-பேரூர்-வட்டங்கள் மற்றும் அனைத்து பாகங்களிலும் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இவற்றின் தொடர்ச்சியாக, இல்லந்தோறும் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து, அரசியல்மயப்படுத்தும் நோக்கில் , கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், தி.மு.க. இளைஞர் அணி மன்றங்கள் திறக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக்கான 30 இளைஞர் அணி மன்றங்களை, நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்து, எழுச்சிமிக்க உரையாற்றினார்.
அப்போது அவர், வருகின்ற 50 நாட்களுக்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் உரிமையோடு கேட்டுக்கொண்டு, கழகத்தின் வெற்றிக்கு மன்ற நிர்வாகிகளாகிய உங்களின் உழைப்பு நிச்சயம் ஓர் அடித்தளமாக இருக்க வேண்டும். இளைஞர் அணி மன்றங்களின் பணிகள் சிறக்கட்டும்’’ என்று குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் விவரம் வருமாறு:
இன்று கழகத்தின் வரலாற்றில், தி.மு.க-வின் வரலாற்றில், இளைஞர் அணி வரலாற்றில், மிக மிக முக்கியமான ஒரு நாள். இளைஞர் அணியின் சார்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளைஞர் அணி மன்றங்களைத் துவக்கி வைத்து, உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். எனவே, அதற்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் களப்பணிக்குத் தயார்
ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கி வைத்தார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் டாக்டர் கலைஞர் அவர்கள் இளைஞர் அணியைத் துவக்கி வைத்தார். அந்த வகையில் இன்று நம் இளைஞர்களை அரசியல் களப்பணிக்குத் தயார் செய்ய வேண்டும் என்று இன்று வள்ளுவர் கோட்டத்தில், நம் இளைஞர் அணி மன்றத்தை நாம் துவக்கி வைத்திருக்கிறோம். தலைவரின் அனுமதியைப் பெற்று நாம் இந்த மன்றங்களையெல்லாம் துவக்கி இருக்கிறோம். 12 மன்றங்களுக்கு நானே நேரடியாகச் சென்று அவற்றின் பெயர் பலகையையும், நிர்வாகிகளையும் சந்தித்து, கழகக் கொடியேற்றி இன்று இங்கே வந்து 18 மன்றங்களைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்திருக்கிறேன்.
2019-ஆம் ஆண்டு நான் இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு பணிகளை இளைஞர் அணியின் சார்பாக நடத்தி வருகிறோம். இப்போது ஏன் மன்றங்களைத் தொடங்கி இருக்கிறோம் என்று உங்களில் சிலருக்குக் கேள்வி எழலாம். பாகம் வரை நிர்வாகிகளை நியமித்த பிறகும், உங்களைப் போன்ற ஏராளமான துடிப்பான இளைஞர்கள் இளைஞர் அணியில் பணியாற்ற வேண்டும் என்றும், மக்கள் பணியைச் செய்ய வேண்டும் என்றும், நீங்கள் அனைவரும் ஆர்வத்தைக் காட்டினீர்கள். உங்களின் அந்த ஆர்வத்திற்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், உங்களின் ஆற்றலை, இளைஞர் அணிக்கும் கழகத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும், இன்று இந்த மன்றங்களை நாம் தொடங்கி இருக்கிறோம்.
பலம் சேர்க்கின்ற வீரர்கள்
இன்று சென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு மேற்குப் பகுதிக்கு உட்பட்ட ஆறு கழக மாவட்டங்களில் இந்த மன்றங்களைத் தொடங்கி இருக்கிறோம். ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் எனக் கிட்டத்தட்ட ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 செயற்குழு உறுப்பினர்கள் என ஒரு இளைஞர் அணிக்கு, ஒட்டுமொத்த இளைஞர் அணிக்கு மட்டும் இந்த மன்றம் பலம் சேர்க்கப் போவதில்லை. நம் கழகத்திற்கே பலம் சேர்க்கப் போகிறது இந்த மன்றங்கள். இளைஞர் அணி கழகத்தின் இராணுவம் என்று சொன்னால், அந்த இராணுவத்திற்குப் பலம் சேர்க்கின்ற வீரர்களாக இன்று மன்றத்தில் நீங்கள் அனைவரும் சேர்ந்து இருக்கிறீர்கள்.
இந்தத் பொறுப்புக்கு நீங்கள் சாதாரணமாக வரவில்லை, சாதாரணமாக உங்களைத் தேர்வு செய்யவில்லை. பரிந்துரைகள் இல்லாமல், உங்களுடைய ஆர்வத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உங்களின் கடின உழைப்பு மற்றும் களப்பணியைக் கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்புக்கு முழுத் தகுதியுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதனால், உங்கள் அத்தனை பேருக்கும் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெருங்கிய தொடர்பு
இளைஞர் அணிக்கும் சென்னை மேற்கு மாவட்டத்திற்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. இளைஞர் அணியிக் எந்தப் பணியாக இருந்தாலும், அதை முதலில் எடுத்துச் செய்வது இந்த சென்னை மேற்கு மாவட்டமாகத்தான் இருக்கும். அதற்கு மிக மிக முக்கியமான காரணம், நம் மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு அவர்கள் இளைஞர் அணியில் முழுப் பயிற்சி எடுத்துக்கொண்டு இன்று மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
அதனால் எப்போதுமே இளைஞர் அணியின் வளர்ச்சிக்கும் பணிகளுக்கும் அவர் தன்னுடைய முழுஆதரவைக் கொடுப்பார். குறிப்பாக, இந்த மன்றங்களைத் தொடங்க வேண்டும் என்று சொல்லும்போது, அந்தப் பணிகளை நான் செய்கிறேன், முழுவேகத்தில் எடுத்துச் செய்கிறேன் என்று இன்று அதைச் சாத்தியப்படுத்திக் காட்டி இருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி, நம் மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் ஜோயல் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை மிகச் சிறப்பாக இன்று அவர் செய்துகாட்டி இருக்கின்றார். இந்த வேலை என்று மட்டுமல்ல, எந்த வேலை கொடுத்தாலும், அதைச் சிறப்பாக செய்யக்கூடியவர்தான் ஜோயல் அவர்கள். அந்த வகையில், இன்றும் அவருக்கு நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் சேவை 50%, கழகப் பணி/ இளைஞர் அணிப் பணி 50%
எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாக இன்று சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் அவர்கள் இந்த மன்றங்களை மிகச் சிறப்பாகவும் முழு ஈடுபாட்டோடும் செய்திருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கும் நம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, அவருக்குத் துணை நின்ற அனைத்து அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி மற்றும் வட்ட அமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
இன்று மன்றத்தை ஆரம்பித்துவிட்டோம். மன்றத்தில் பல பேர் சேர்ந்து இருக்கிறீர்கள். அடுத்து என்ன? அடுத்து எங்களுக்கு என்ன வேலை? என்ன கடமை கொடுக்கப் போகிறீர்கள்? என்ன பொறுப்புக் கொடுக்கப் போகிறீர்கள்? என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். மக்கள் சேவை 50%, கழகப் பணி/ இளைஞர் அணிப் பணி 50% எனச் சமநிலைப்படுத்தி, நம் வேலைகளைப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் இளைஞர் அணி அப்படித்தான் செயல்பட்டு வருகிறது.
கட்சிப் பணி மட்டுமல்ல, இளைஞர் அணிப் பணி மட்டுமல்ல, ஏரி, குளங்களைத் தூர்வாருவது, கொரோனா காலத்தில் உதவி மையம் எண் கொடுத்துப் பொதுமக்களுக்கு உதவி செய்தது, சட்டமன்றம் தோறும் கலைஞர் நூற்றாண்டு இளைஞர் அணி நூலகங்களைத் திறந்தது, கோடைகால நீர்மோர்ப் பந்தல்கள் என மக்களுக்கு என்னென்ன தேவையோ அவை ஒவ்வொன்றையும் நம் இளைஞர் அணியில் நாம் செய்திருக்கிறோம். ஆகவே மன்றத்தினர் நீங்களும் அதை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு உங்களின் செயல்பாடுகளை அப்படிப் வகுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் தெருவில் யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை நீங்கள் உடனே உங்களால் செய்ய முடிந்தால் அதைச் செய்து கொடுத்துவிடுங்கள். அரசு சார்பாக ஏதாவது சான்றிதழ் வாங்குவது, இரத்த தான முகாம்கள் நடத்துவது, மருத்துவ உதவி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, கல்வி உதவி என உங்களால் எந்தெந்த உதவிகளைச் செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்யுங்கள்.
நேரடித் தொடர்பில் இருங்கள்
உங்களால் முடிவதைச் செய்துகொடுங்கள். உங்களால் முடியாததை உங்களின் வட்ட அமைப்பாளர், இளைஞர் அணி அமைப்பாளர், பாக அமைப்பாளர், பகுதி அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாகப் பொதுமக்களிடம் நேரடித் தொடர்பில் இருங்கள். பொதுமக்களிடம் நற்பெயரைச் சம்பாதிக்கின்ற அந்தப் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அந்த வகையில், உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
உங்களை நீங்களே முதலில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களின் குடும்பத்தில் இருப்பவர்களை நீங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் உங்களின் சகோதரரிடமும், பெற்றோரிடமும் அவர்களோடு அரசியல் பேசுங்கள். ஏனென்றால், நீங்கள் உங்களின் வீட்டை நன்றாக நிர்வகித்தால்தான் உங்களின் தெருவை நீங்கள் நிர்வகிக்க முடியும். உங்களுக்கான மரியாதையை அது ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களுக்கான பொறுப்பையும் நல்ல பெயரையும் அது ஏற்படுத்திக் கொடுக்கும்.
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அரசியல் பேசுங்கள். ஒன்றிய அரசு இன்று தமிழ்நாட்டுக்கு எதிராக என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்கிற சூழ்ச்சிகளை எடுத்துச் சொல்லுங்கள். நம் அரசின் திட்டங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ தெரிந்துகொண்டு, அவற்றை எடுத்து விளக்குங்கள். நீங்கள் எந்தவிதமான ஒரு சின்ன தவறுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது. உங்கள் மதிப்பு, இளைஞர் அணியின் மதிப்பு, மன்றத்தின் மதிப்பு மிக மிக முக்கியம்.
களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் நீங்கள் துடிப்புடன் நிச்சயமாக இருப்பீர்கள். அதை நீங்கள் தொடர்ந்து இன்னும் மன்றத்தின் சார்பாக, இளைஞர் அணியின் சார்பாக செய்ய வேண்டும். முக்கியமாக, தினமும் தயவுசெய்து காலையில் செய்தித்தாள் படியுங்கள். அதுவும் தவறாமல் `முரசொலி’ நாளிதழ் படியுங்கள். முரசொலியில் தினமும் காலையில் ஒரு பக்கம் நம் இளைஞர் அணிக்கு என்று ஒரு பக்கத்தை, நம் தலைவர் அவர்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள், பாசறைப் பக்கம். படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும். அதை முடிந்தவரைப் படித்துவிடுங்கள். தலைவர்களின் அறிக்கைகள், கழகத்தின் செய்திகளை தினமும் பின்பற்றுங்கள். ஏனென்றால், இன்று சினிமாவில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகள் மட்டுமே உலகம் கிடையாது. அதைத் தாண்டி ஒரு மிகப்பெரிய உலகம் இருக்கிறது. அதுதான் உண்மையான உலகம்.


கழக வரலாற்றைப் படியுங்கள்
சமூக நீதி, மாநில சுயாட்சி, பெண் விடுதலை இதெல்லாம் என்ன என்று தேடித்தேடிப் படியுங்கள். ஒவ்வொரு இடத்திலும் நம் கலைஞர் நூலகங்கள் அமைத்திருக்கிறோம், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் தமிழ் மொழியைப் பாதுகாக்க, தமிழ்நாட்டைப் பாதுகாக்க, நம் தமிழ்நாட்டின் வரலாற்றைப் படியுங்கள். என்ன விதமான விடுதலைப் போராட்டங்கள், மொழிப்போர் தியாகங்கள் எல்லாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இயக்க வரலாற்றை, கழக வரலாற்றைத் தயவுசெய்து தேடிப் படியுங்கள்.
மன்றத்தில் இருக்கிறோம், நம்மை யார் இனிமேல் கவனிக்கப் போகிறார்கள் என்று தயவுசெய்து அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நான் தினமும் உங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். மன்றத்தில் நீங்கள் சரியாக உழைத்தால், நிச்சயம் உங்களுக்கான அந்த அங்கீகாரம் வெகுவிரைவில் கிடைக்கும். நான் இதை ஏன் இன்று சொல்கிறேன் என்றால், இன்று கழகத்தில் இருக்கக்கூடிய பல மூத்த நிர்வாகிகள் அந்தக் காலத்தில் மன்றத்தில் பயிற்சி எடுத்து வந்தவர்கள்தான். இளைஞர் அணி மன்றத்தில் பயிற்சி எடுத்து இளைஞர் அணிக்கு வந்தார்கள். பிறகு இன்றைக்குக் கழகத்தின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய நம் அண்ணன் மா.ப.அன்புதுரை போன்றவர்கள் எல்லாம் மன்றத்தில் தொடங்கிப் பயிற்சி பெற்று இன்று பகுதிச் செயலாளராக இருக்கிறார். இளைஞர் அணியில் சரியாக உழைத்தால், அதற்கான உயர்வு நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.
உற்சாகமாகச் செய்யுங்கள்
அதற்கு உங்கள் பகுதிச் செயலாளர் வினோத் வேலாயுதம் அவர்கள், மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளராகத் இளைஞர் அணியில் பணியாற்றி, அதன் பிறகு தலைமைக் கழகத்துக்குச் சென்றவர்தான் வினோத் வேலாயுதம் அவர்கள். இன்று இளைஞர் அணியில் சிறப்பாகப் பணியாற்றிய பலர் மாவட்டச் செயலாளர்களாக, ஒன்றியச் செயலாளர்களாக, நகரச் செயலாளர்களாக, அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, துணை மேயர்களாக இன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். இன்னொன்று பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கொடுத்தது நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உற்சாகமாக வேலை செய்யுங்கள்.
உங்கள் கைகளில் ஒரு `மினிட் புத்தகம்’ இன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதைத் தயவுசெய்து முறையாக பராமரியுங்கள். அதில் உங்களின் பணிகளை முடிந்தவரைப் பதிவு செய்யுங்கள். அதுதான் உங்கள் உழைப்புக்கு, பணிகளுக்கு ஓர் ஆதாரமாக, பதிவாக இருக்கப் போகிறது. நான் சென்னையில் இருக்கும்போது, நேரில் வந்து என்னை நீங்கள் அனைவரும் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
இப்பொழுது தேர்தல் வருகின்றது. அதனால் நம் களப்பணியில் மிக மிக முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டும். மன்றத்துக்கு 20 பேர் என்றால் உங்களின் அந்த மன்றம் மூலமாக குறைந்தபட்சம் ஒரு 200 வாக்குகளையாவது நாம் மாற்ற வேண்டும். கழகத்துக்கு வருகின்ற மாதிரி நம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை
நம்மிடம் இயக்கத்தின் கொள்கை, வரலாறு இருக்கிறது, நம் அரசின் சாதனைகள் இருக்கின்றன. மகளிர் விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இப்படி எத்தனையோ திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது சமீபத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் - அதன்பிறகு கோடை கால சிறப்பு நிதியாக 2,000 ரூபாய் என 5,000 ரூபாய் ஒரு கோடியே 31 லட்சம் குடும்பங்களுக்கு நம் தலைவர் அவர்கள் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு மக்களிடம் கொண்டு சேருங்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஏகப்பட்ட பணிகளை, நம் அரசு சிறப்பாகச் செய்திருக்கிறது. அண்ணா மேம்பாலம் புதுப்பிப்பு, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கலைஞர் நினைவு குத்துச்சண்டை அகாடமி, புற்றுநோய் பரிசோதனை மையம், சர்வதேசத் தரத்தில் நீரிழிவு சிகிச்சை மையம், நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் , கால்பந்து அரங்கம் என இப்படிப் பல்வேறு திட்டங்களை இந்த ஆயிரம் விளக்குப் பகுதிக்கு நாம் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் பிடிக்காமல்தான் ஒன்றிய அரசு இன்று பல்வேறு தடங்கல்களை நம் அரசுக்குக் கொடுத்து வருகிறது.
மிகப்பெரிய வெற்றி
இவற்றையெல்லாம் தாண்டி நம் முதலமைச்சர் அவர்கள் இன்று இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி உள்ள மாநிலமாக, 11.19 சதவிகிதம் என ஒரே இரட்டை இலக்க வளர்ச்சி உள்ள மாநிலமாக இன்று நம் தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டு வருகிறார். இதெல்லாம் பொறுக்க முடியாமல்தான் இன்று ஒன்றிய அரசு பல்வேறு வகையில நமக்குத் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே இதையெல்லாம் தாண்டி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நம் கழக அரசுக்கு, நம் தலைவருக்கு நீங்கள் தேடிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நம் தலைவர் அவர்கள் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்கைக் கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு 50 நாட்கள்தான் இருக்கின்றன. அந்த 50 நாட்களும் நம் பணிகளை நாம் செயல்படுத்த வேண்டும்.
200 அல்ல, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வென்று காட்டும் என நாம் செய்து காட்ட வேண்டும். அதற்கான தொடக்கமாக உங்களின் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஏழாவது முறையாகக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பில் அமர வேண்டும் என்றால் வருகின்ற 50 நாட்களுக்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் உரிமையோடு கேட்டுக்கொண்டு, கழகத்தின் வெற்றிக்கு மன்ற நிர்வாகிகளாகிய உங்களின் உழைப்பு நிச்சயம் ஓர் அடித்தளமாக இருக்க வேண்டும். இளைஞர் அணி மன்றங்களின் பணிகள் சிறக்கட்டும் என்று சொல்லி இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.






