
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.2.2026) உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையின் சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் பழமையான தலைமை அலுவலக கட்டடம் மற்றும் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, ஆவணகாப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 100 வருடங்கள் பழைமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் (Japanese Tissue) செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்கும் வகையில் பல புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, பழமையான கட்டமைப்புகளை புனரமைத்து வரலாற்று சிறப்புகளை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்த்து வருகின்றார்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிர்வாகம் சார்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வரும் தனது சேவையில் நூறு ஆண்டுகள் கடந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த 1909-ஆம் ஆண்டு “மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்” என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1973-இல் “தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி ஆவணக்காப்பகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2009-ஆம் ஆண்டு தனது 100-வது ஆண்டை நிறைவு செய்தது.
சுமார் 40 கோடி ஆவணங்கள் கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சியாளர்களின் மிகச்சிறந்த தேடல் களமாக உள்ளது. தமிழ்நாட்டின் விடுதலை வரலாறு, சமூக நீதி வரலாறு, அரசு நிர்வாக வரலாறு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி கால அரசுத்துறைகளின் காலவாரியான ஆவணங்கள், நில வரைபடங்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவை ஆவணக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று திறந்து வைக்கப்பட்ட நவீன கண்காட்சிக் கூடத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியது குறித்த ஆவணம் உள்ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






