
விவசாயிகளுக்கு பயனளிக்க உருவாக்கப்பட்ட சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) நேரடி பலன் பரிமாற்ற (DBT) வழிமுறைகளில் ஏற்படும் தாமதங்களைக் கண்டறிந்து நீக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என திமுக வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இத்தகைய தாமதத்திற்கான காரணங்கள் என்ன என்றும் நிலப் பதிவுகள், ஆதார் அங்கீகாரம் தொடர்பான சிக்கல்களால் PMKISAN பலன்கள் பெற முடியாமல் போன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படும் PMFBY இன் கீழ் பயிர் காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிப்பது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
சுரங்கத் துறைகளில் தனியார் பங்கேற்பால் ஏற்படும் பாதிப்புகளை அரசு ஆய்வு செய்துள்ளதா?
சமீபத்திய சுரங்கத் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரசாங்கம் தனியார் துறை பங்கேற்பை விரிவுபடுத்தி, முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுகிறதா என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
மேலும், தனியார்மயமாக்கலுக்காக அடையாளம் காணப்பட்ட பொதுத்துறை சுரங்க சொத்துக்களின் எவை? தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கான வருவாய் ஆகியவற்றை அரசு கருத்தில் கொண்டு செயல்படுகிறதா என்றும் தனியார் பங்கேற்பின் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அரசிடமுள்ள திட்டங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.






