
சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, வஞ்சிநகரம் பகுதியில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி, எதிர் திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது.
அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்தில், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து இடதுபுறமாகத் திரும்பி, வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையின் மீதும் பயங்கரமாக மோதி நின்றது. இந்த மோதலில் பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 41 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






