தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் : “பாதி வேக வைத்த இறைச்சியை தவிருங்கள்...” - அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

ரூ.8 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது கேத்லேப் கருவி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் : “பாதி வேக வைத்த இறைச்சியை தவிருங்கள்...” - அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

  • ரூ.8 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது கேத்லேப் கருவி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

  • மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு இன்னும் முடிவடையாத சூழ்நிலையில், அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டடத்தை பார்க்காமலே படிப்பை முடித்து வெளியே வர இருக்கிறார்கள்

  -மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (10.02.2026) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவியினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

=> ரூ.8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவி

உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்புகள் என்பது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் WHO, ICMR போன்ற சுகாதார அமைப்புகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கோவிட் பேரிடத்திற்கு பின்பு பெரிய அளவிலான பாதிப்புகள் உலகம் சந்தித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மருத்துவக்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், 2 கேத்லேப் அதாவது 2 இருதய வடிகுழாய் ஆய்வகம் (Cardiac Cathlab) இம்மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 2 கேத்லேப் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெரியார் அரசு மருத்துவமனையில் 1 கேத்லேப் அமைக்கப்பட்டிருக்கிறது. சேலம் அரசு மோகனகுமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக ஒரு கேத்லேப் அமைக்கப்பட்டது. அந்தவகையில் இன்று 7வது புதிய கேத்லேப் சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மட்டுமே இதுவரை 7 கேத்லேப் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மிக விரைவில் கடலூர், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, இராமநாதபுரம்  ஆகிய 5 இடங்களில் புதிய கேத்லேப் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேத்லேப் கருவியின் பயன் என்பது மாரடைப்பு சிகிச்சையில் மிக எளிதான பணியினை இந்த கருவி செய்து வருகிறது. மாரடைப்பு ஏற்பட்ட மருத்துவ பயனாளிகளில் கேத்லேப் மூலம் அடைப்புகளை உடனடியாக அகற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க இது உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இருதய பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயநாள அடைப்புகளை அகற்றுவதற்கு இக்கருவி பயன்பெறுகிறது. மேலும் இருதய துடிப்பு குறைபாடுகளுக்கான கருவி சிகிச்சை (Pacemaker & ICD (Implantable Cardioverter – Defibrillator) வழங்குவதற்கு கேத்லேப் பயன்படுகிறது. இருதய துடிப்பு குறைவாக உள்ள பயனாளர்களுக்கு Pacemaker பொறுத்தப்படுகிறது. சீரற்ற இருதய பயனாளர்களுக்கு ICD (Implantable Cardioverter – Defibrillator பொறுத்தப்படுகிறது. இந்த கேத்லேப் கருவி சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டிலானது.  

=> பன்னோக்கு மருத்துவமனையின் சேவை

ஏற்கெனேவே இம்மருத்துவமனையில் கேத்லேப் கருவி ஒன்று பயன்பாட்டில் இருந்தாலும், தினந்தோறும் ஏறக்குறைய சுமார் 20 பேர் சிகிச்சை செய்துக் கொள்ளும் நிலை இருந்துக் கொண்டிருக்கிறது, இம்மருத்துவமனையில் தினந்தோறும் 600க்கும் மேற்பட்டவர்கள் இருதய பாதிப்பு என்கின்ற வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினந்தோறும் அதிகப்படியான பொதுமக்கள் இருதய சிகிச்சைக்கு வருகை புரிவதால் இன்னொரு கேத்லேப் கருவி வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அவர்கள் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டிலான கேத்லேப் கருவியினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இருதய பிரிவில் மாதம் சுமார் 500 பேர் வரை உள் மருத்துவ பயனாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னாள் நாள்தோறும் சுமார் 500 பேர் வரை மட்டுமே புற மருத்துவ பயனாளர்களாக சிகிச்சை பெற்று வந்த நிலை மாறி தற்போது தினந்தோறும் புற மருத்துவ பயனாளர்கள் 2,500 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். மாதம் சுமார் 15,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். தினந்தோறும் இம்மருத்துவமனையில் 25 அறுவை சிகிச்சைகள், சிறிய அறுவை சிகிச்சைகள் 15, முழு உடற் பரிசோதனை தினந்தோறும் 55 என்று பல்வேறு வகைகளில் இம்மருத்துவமனை சேவையாற்றி வருகிறது. 

பறவைக் காய்ச்சல் : “பாதி வேக வைத்த இறைச்சியை தவிருங்கள்...” - அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

=> ரூ.34 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் 

முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தார்கள். இதுமட்டுமல்லாமல் பல்வேறு வகைகளிலான மருத்துவ சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் காரணத்தினால் தினந்தோறுமான மருத்துவ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்காரணமாக ரூ.8 கோடி மதிப்பீட்டிலாக கேத்லேப் கருவி இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கேத்லேப் பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 இலட்சம் வரை செலவாகும். முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கேத்லேப் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. 

=> மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான கேள்விக்கு

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முடியும் தருவாயில் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு பிளாக் மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவும்கூட முதலமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியினை விரைப்படுத்திட வேண்டும் என்று சொல்லி என்னையும், இத்துறையின் செயலாளர் அவர்களையும் ஜப்பானுக்கு அனுப்பி JICA நிறுவனத்தின் துணைத் தலைவர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் போனது மட்டுமல்ல டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் அதிகாரி அவர்களையும் அழைத்து சென்றோம்.

ஜப்பான் பன்னோட்டு கூட்டுறவு முகமை (JICA) நிறுவனம் தான் ஒன்றிய அரசு இதற்கான கடனை கேட்டு இருந்தது. அதற்கான நிதி நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில், முதலமைச்சர் அவர்கள் நேரிடையாக ஜப்பானுக்கு சென்று அந்த கடனை விடுவிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்த சொன்னார்கள். அந்தவகையில் நானும் இத்துறையின் செயலாளர் அவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலர் அவர்களும் சென்று JICA துணைத் தலைவர் அவர்களிடம் கேட்டோம். கேட்டதற்கு பிறகுதான் அந்த தொகை விடுவிக்கப்பட்டது கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முழுமையாக பணிகள் முடிவடைவதற்கு 2028 இறுதி ஆகும் என்று அன்றே ஜப்பான் JICA நிறுவனம் சொன்னது. இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கு முதலமைச்சர் அவர்கள் ஒத்துழைப்பு தந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களை சேர்க்க வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் என்கின்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அம்மாணவர்கள் நமது மாநில அரசு மருத்துவக்கல்லூரியில்தான் பயின்று வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பார்க்காமலேயே மருத்துவக்கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக ஒரு Batch வர இருக்கிறது. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்றைய நிலை. 

=> பறவைக் காய்ச்சல் தொடர்பான கேள்விக்கு

பறவைக் காய்ச்சல் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் நமது மாநில சுகாதாரத்துறை காகங்களோ அல்லது கோழி போன்ற பறவைகளோ திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனால் அதனை கண்டவர்கள் உடனடியாக ஆழமான குழியில் புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கோழி போன்றவைகள் திடீரென்று இறந்து போனால் இறந்த கோழியினை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தலும் விடுவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோழி இறைச்சியை உண்பவர்கள் நன்றாக சமைத்த உணவினையே உண்ண வேண்டும். பாதி வேக வைத்த இறைச்சியை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் இந்த அறிவுறுத்தல்களை மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் அவர்கள் கூட அனைத்து அலுவலர்களுடான ஒரு கூட்டத்தை நடத்தி, இது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதனால் தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். 

banner

Related Stories

Related Stories