
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.2.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நலவாழ்வு பெறவேண்டும் என்கிற உயரிய நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்திடும் “மக்களைத் தேடி மருத்துவம்”, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சிறப்பு மருத்துவ சேவைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.
அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைத்தல்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தற்போது 25 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தற்போது 45 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தற்போது 30 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, இராஜபாளையம் அரசு மருத்துவமனை தற்போது 40 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை, கரூர் மாவட்டம் – குளித்தலை அரசு மருத்துவமனை தற்போது 40 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பூர் மாவட்டம் – காங்கேயம் அரசு மருத்துவமனை தற்போது 12 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை
10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நலப்பிரிவு கட்டடம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவிலான குடிநீர் வழங்கும் திட்டம்;
என மொத்தம் 208 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட ஆறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனைகளுக்கான கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் – குத்தாலம், திருப்பூர் மாவட்டம் – ஜல்லிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் – பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, தேனி மாவட்டம் – கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பூர், கடலூர் மாவட்டம் – வேப்பூர், விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி, திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி, பெரம்பலூர் மாவட்டம் – கிருஷ்ணாபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – முசிறி, மற்றும் தென்காசி மாவட்டம் – ஆலங்குளம் ஆகிய 14 அரசு மருத்துவமனைகளில் 72 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கட்டடங்களை திறந்து வைத்தல்
சென்னை, கிண்டி உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் 9 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் 4 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மண்டலத்திற்கான மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
என மொத்தம் 15 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவுகளை திறந்து வைத்தல்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, கன்னியாகுமரி மாவட்டம் - திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள யுனானி மருத்துவப் பிரிவு, நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, திருவாரூர் மாவட்டம் - திருவிழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, நீலகிரி மாவட்டம் - கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் மருத்துவப் பயனாளிகள் கட்டணப் பிரிவு;
என மொத்தம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவுகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை திறந்து வைத்தல்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் – பதுவஞ்சேரி, கடலூர் மாவட்டம் – விருதாச்சலம், புதுக்கோட்டை மாவட்டம் – அறந்தாங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – காட்டூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்; கடலூர் மாவட்டம் – கிருஷ்ணாபுரம், கரூர் மாவட்டம் – சேங்கல், தஞ்சாவூர் மாவட்டம் – தாமரங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – மம்சாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 5 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்;
அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 98 பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்கள், என மொத்தம் 48 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடி செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது






