
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்கள் உடனடியாகத் தங்களுடைய பரப்புரையைத் தொடங்குங்கள். யார் நம்மைக் காப்பார்கள், யார் நம்மை வளர்ப்பார்கள், யார் நமக்கு உரிமையைப் பெற்றுத்தருவார்கள் என்று எடுத்துச் சொல்ல வேண்டும் என கும்பகோணத்தில் இன்று (28-01-2026) நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்துகொண்டு, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:- “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறும், இந்த “மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு” மாநில மாநாட்டில் கலந்து கொண்டு, உங்கள் அனைவரையும் ஒருசேர சந்தித்து - உங்களிடம் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன், புளகாங்கித உணர்வோடு இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன்!
நேற்று முன்தினம்தான், இதே தஞ்சை மண்டலத்திற்கு, ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ மாநாட்டிற்காக வந்தேன். இன்றைக்கு, இந்த மாநாட்டிற்கு – உங்கள் மாநாட்டிற்கு – மன்னிக்கவும், நம்முடைய மாநாட்டிற்கு வர வைத்திருக்கிறார் நம்முடைய ‘தகைசால் தமிழர்’ – பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்கள். அவர் எப்போது அழைத்தாலும் நான் வந்துவிடுவேன். இதுவரைக்கும் நான் மறுத்ததில்லை. அவர் ஒவ்வொருமுறையும், இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த ஏதேனும் நிகழ்ச்சிக்கு – விழாவிற்கு – மாநாட்டிற்கு, என்னிடத்தில் வந்து தேதி கேட்க வருவார். நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வர வேண்டும்.

தொலைபேசியில் அழைத்து உத்தரவிட்டால், நான் வந்துவிடுவேனே என்று சொல்வதுண்டு. இல்லை, இல்லை... நான் நேரடியாக வந்து கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று 5, 6 தேதிகளைக் குறிப்பிட்டுச் சொல்வார். நான் உடனே சொல்வதுண்டு. எந்தத் தேதி என்று சொல்லுங்கள். இந்த ‘சாய்ஸ்’ எல்லாம் கொடுக்காதீர்கள் என்று சொல்லுவேன். நான் அவரிடத்தில் உரிமையோடு, அதை உறுதி செய்து, அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.
இந்தப் பயணங்களால் ஏற்படும் அலைச்சலைவிட, நீங்கள் தரும் அன்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை, ஊக்கத்தை, உற்சாகத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பேராசிரியர் அய்யா அவர்களுடைய அழைப்பைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு இங்கே நான் வந்திருக்கிறேன்.
பள்ளிவாசல்களை மையமாக வைத்து, சமூக உதவிகள், சேவைகள், சீர்திருத்தங்கள் செய்யும் – சமூகப் பணியாற்றும் அமைப்புகளாக இருக்கும், ‘மஹல்லா ஜமாஅத்’ அமைப்புகள், இஸ்லாமியப் பண்பாட்டில் மிக மிக முக்கியமானது; அடிப்படையானது. வழிபாட்டுத் தலங்கள் என்பவை, தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை – சமூக வளர்ச்சி - கல்வி ஆகியவற்றோடும் தொடர்புடையது என்று மெய்ப்பித்துக் கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில், முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகளைப் பெற்றுள்ள, 30 பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள். உள்ளத்தால் – உணர்வால் - உடன்பிறப்புகள் நாம்! இது, இன்று நேற்று ஏற்பட்ட உணர்வல்ல; காலம் காலமாக தொடரும் நட்பு!
பேரறிஞர் அண்ணா அவர்களையும் - தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்க, பாலமாக இருந்ததே திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாதான்.
தமிழ்நாட்டின் வரலாற்றை புரட்டிப் போட்ட 1967 தேர்தலில், பேரறிஞர் அண்ணாவிற்குத் தோள் கொடுத்து நின்றவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்! தலைவர் கலைஞரின் வாழ்க்கையில், அசன் அப்துல்காதர், கருணை ஜமால், கவிஞர் கா.மு. ஷெரிப், இசைமுரசு நாகூர் ஹனிபா, அண்ணன் சாதிக் பாட்ஷா, ரகுமான் கான் போன்ற ஏராளமான இஸ்லாமியப் பெருமக்கள் உற்ற தோழர்களாக, உடன் இருந்தார்கள்!
இஸ்லாமிய மக்களுக்காகத் தலைவர் கலைஞர் அவர்கள் செய்திருக்கும் நன்மைகளில் – சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை என்று அறிவித்தார். அ.தி.மு.க. அரசு அதை ரத்து செய்தாலும், மீண்டும் ஆட்சிக்கு வந்து, அரசாணை வெளியிட்டு விடுமுறை வழங்கினார், தலைவர் கலைஞர் அவர்கள்.

உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட, நிதி ஒதுக்கி, இடம் ஒதுக்கினார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு,
காயிதேமில்லத் மகளிர் கல்லூரி - காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்குக் இடம் என்று, கலைஞர் செய்ததை எல்லாம் பட்டியலிட்டால், இன்றைக்கு முழுவதும் நான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்!
தலைவர் கலைஞர் அவர்கள், இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று, ஒருபோதும் நினைத்தது கிடையாது! அதனால்தான், இஸ்லாமிய சமூகத்தினர் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தியபோது, “எனக்கு நன்றி சொல்லி, உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்” என்று சொன்னார். கலைஞர் சொன்ன அதே உணர்வோடுதான் - அதே வழித்தடத்தில்தான், இந்த ஸ்டாலினும் – திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நேரத்தின் அருமையைக் கருதி, இந்த ஐந்து ஆண்டுகளில், இஸ்லாமிய மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் முத்தாய்ப்பான சிலவற்றை மட்டும் நான் சொல்கிறேன்...
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக - ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்ட அடிக்கல் நாட்டி இருக்கிறோம்.
2024-ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு, ஆண்டு நிர்வாக மானியத்தை 80 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில், 24 கோடியே 56 லட்ச ரூபாய் மானியமாக வழங்கி, தமிழ்நாட்டில் இருந்து 11 ஆயிரத்தி 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், 31 ஆயிரத்தி 625 பயனாளிகளுக்கு, 207 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அதனால், இந்த ஆண்டு, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், ஒரு லட்சத்து ஆயிரத்து 159 முஸ்லிம் மாணவிகளுக்கு, ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையைத் தமிழ்நாடு அரசே வழங்கியிருக்கிறது.
தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களைப் புனரமைக்கும் பணிகளுக்காக இதுவரைக்கும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 தர்காக்கள் இன்றைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு, இஸ்லாமியப் பெருமக்களின், வாழ்க்கைச் சூழலை, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக நம்முடைய திராவிட மாடல் அரசு, நாள்தோறும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறது. நம்முடைய பேராசிரியர் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னாரே... கேட்காமலேயே திட்டங்களை வாரி வழங்குவதுதான் திராவிட மாடல்!
இப்போது, இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள். நான் இந்த மாநாட்டிற்கு வருவதற்கு முன்பே, நேற்றைக்கே, இந்த மாநாட்டுத் தீர்மானங்களை ‘மணிச்சுடர்’ பத்திரிகையில் படித்துவிட்டுத்தான் இந்த மேடைக்கே வந்திருக்கிறேன். முதலமைச்சர் வருகிறார்; முடிந்த வரைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் வைத்துவிட வேண்டும் என்று, அன்பின் மிகுதியால் அதிகமான கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் கோரிக்கை வைத்தால், உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. இவ்வளவு தூரம் உங்களுக்காக வந்துவிட்டு, அறிவிப்புகளை வழங்காமல் செல்ல முடியுமா? அதுவும், ஆயிரக்கணக்கானோரை இங்கு அழைத்துவைத்து, இந்தக் கோரிக்கைகளை எடுத்து வைக்கும் நேரத்தில், நானும் இந்த மாநாட்டில் ஐந்து முக்கிய அறிவிப்புகளை, உங்களுக்காக - உங்களில் ஒருவனாக வெளியிட விரும்புகிறேன்.
முதலாவது அறிவிப்பு - தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவுபெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்தி 500 ரூபாயும் இப்போது வழங்கப்படுகிறது. இனி, 5 ஆயிரம் ரூபாயாக ஓய்வூதியமும், 2 ஆயிரத்தி 500 ரூபாயாகக் குடும்ப ஓய்வூதியமும், உயர்த்தி வழங்கப்படும்!
இரண்டாவது அறிவிப்பு - உலமாக்கள் நலவாரியத்தில் 15 ஆயிரத்தி 60 உலமாக்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில், ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத் தொகை, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு - கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்கள் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவை அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருதுமொழி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் மகிழ்ச்சிதானே? அண்ணன், உங்களைத்தான் கேட்கிறேன், மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சி!
மீதம் இருக்கும் கோரிக்கைகளும் படிப்படியாக – ஆனால், உறுதியாக நிறைவேற்றப்படும்.
அதேபோன்று, நம்முடைய திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டி – மீண்டும் திராவிட மாடல் அரசுதான் தொடர வேண்டும் என்று நம்பிக்கையுடன் நீங்கள் போட்ட தீர்மானங்களுக்கும் நான் இங்கே நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையை, நிச்சயமாக, உறுதியாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை நான் இங்கே வழங்கிட விரும்புகிறேன்.
இந்தத் தீர்மானத்தை, ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்தவரும் பரப்புரை செய்தால் – தங்களின் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால் - மீண்டும் இந்த தி.மு.க.வின் ஆட்சி உறுதியாக உருவாகும்!
இன்றைக்கு நாடு எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறது என்று நான் அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை! அதிலும், இஸ்லாமிய மக்களான நீங்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே தெரியும்! இப்படிப்பட்ட நிலையில், நான் உறுதியோடு சொல்கிறேன், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்! அதற்குக் காரணம், திராவிட முன்னேற்றக் கழகம்! தி.மு.க.தான் சிறுபான்மையின மக்களைக் காக்கும், காவல் அரண்! அதனால்தான், இங்கு உணவு அரசியல் - கும்பல் வன்முறை – போன்றவை இன்றைக்குத் தலையெடுக்காமல் இருக்கிறது!
இந்த அமைதிச் சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமா என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால், தங்களுக்கு ஏற்ற அடிமைகளாக இருக்கும், E.D. - C.B.I. - I.T. இதுபோன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி இன்றைக்கு மேடை ஏறியிருக்கிறார்கள்.
அதிலும், துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும், பத்து தோல்வி பழனிசாமி அவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார் அவர்! பழனிசாமி அவர்களின் துரோகங்களை நாம் எண்ணிப் பார்த்தால், அது சீனப் பெருஞ்சுவரைப் போன்று நீளமானது! அவருக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று - காலில் விழுவது, இன்னொன்று - கால்களை வாரி விடுவது! அப்படிப்பட்டவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்த துரோகங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால், அந்தப் பட்டியில் மிகப் பெரியது.

2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேறுவதற்கு, அ.தி.மு.க. அந்த மசோதாவை ஆதரித்தது. உறுதியாகச் சொல்கிறேன், உங்களுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன், அ.தி.மு.க.வின் ஆதரவு இல்லை என்றால், அந்த மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்திருக்கும். ஆனால் பழனிசாமி அவர்கள், “அந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்?” என்று பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிமேதாவித்தனமாகச் சட்டமன்றத்தில் பேசினார். அவைக்குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மறுக்க முடியாது. 2020-இல் அந்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் போராடியபோது தடியடி நடத்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்தினோம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அந்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வாதிட்டோம், போராடினோம். ஆனால், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்ற மறுத்தார்கள். ஆனால், 2021-இல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் - நாம் பொறுப்பேற்றதும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போதுகூட, அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை! பா.ஜ.க.விற்கு பயந்து, தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று பொய்யைச் சொல்லி வெளிநடப்பு செய்தார்கள்.
ஒன்றிய அரசு இந்த C.A.A. சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டபோது, “இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது” என்று துணிச்சலாக அறிவித்தவன்தான், இதோ உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
C.A.A. சட்டம் மட்டுமா? முத்தலாக் தடைச் சட்டத்திலும் இரட்டை வேடம் போட்டது அ.தி.மு.க.! அடுத்து, வக்பு சட்டத் திருத்தம்! தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கடுமையாகப் போராடினோம்! பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்! ஆனால், அ.தி.மு.க.வின் லட்சணம் என்ன தெரியுமா? எங்கே மக்கள் முன்னால் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அந்தத் தீர்மானத்தை ஆதரித்தாலும் - தங்களின் டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று, நாம் கொடுத்த கருப்பு பேட்ஜைக்கூட போட்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்தார்கள். சட்டமன்றத்தில் இந்த நாடகம் என்றால், நாடாளுமன்றத்தில் அன்றைக்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை அவர்கள், 11 வினாடிதான் பேசினார். அதிலும், வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும்; முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தாமல், பா.ஜ.க. அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருந்தார்.
இப்படியெல்லாம் துரோகம் செய்துவிட்டு, ஒரு கூட்டத்தில் பேசும்போது, கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, தங்களுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம் என்று பச்சைப் பொய்யைப் பேசினார். இப்போது ஒரே மேடையில் நிற்கும் இந்த மக்கள் விரோதக் கூட்டணியை, ஒட்டுமொத்தமாக விரட்ட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது! மறந்துவிடாதீர்கள். அதற்கான வலிமை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் இருக்கிறது!
இஸ்லாமியர்கள் – கிறித்துவர்கள் என்று, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அ.தி.மு.க.வின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும்!
இந்த 2026 தேர்தல் களம், தமிழ்நாட்டின் நலனைக் காக்கும் நமக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான பிரதமர் மோடிக்கும் நடக்கும் தேர்தல்! மறந்துவிடக்கூடாது. அதனால்தான் நான் சொன்னேன், இந்தத் தேர்தல், NDA வெர்சஸ் தமிழ்நாடு. பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால், அது வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திவிடும். ஆனால், அதைத் தடுக்கும் துணிச்சலும் - தைரியமும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் இருக்கிறது!

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வீதி வீதியாக - வீடு வீடாகப் பரப்புரையைத் தொடங்கிவிட்டது போன்று, நான் உரிமையாடு உங்களிடத்தில் கேட்க வந்திருக்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களும், உடனடியாகத் தங்களுடைய பரப்புரையைத் தொடங்குங்கள், தொடங்கத் தயாராகுங்கள்! இங்கு இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் ஏராளாமானோர் வந்திருக்கிறீர்கள்.
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. எனவே, இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! யார் நம்மைக் காப்பார்கள்? யார் நம்மை வளர்ப்பார்கள்? யார் நமக்கு உரிமையைப் பெற்றுத்தருவார்கள்? என்று எடுத்துச் சொல்ல வேண்டும்! நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்தச் சூழ்ச்சிகளாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்க முடியாது! சுயநலத்துக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைத்திருக்கும் அடிமைகளுக்கும் - அவர்களுக்குக் கட்டளையிடும் டெல்லி எஜமானர்களுக்கும் புரிவது போன்று, உரக்கச் சொல்வோம் - உறுதியோடு சொல்வோம், தன்மானமிக்க தமிழ்நாடு தலைகுனியாது! ஒருபோதும் அடிபணியாது! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக!” எனத் தெரிவித்துள்ளார்.






