தமிழ்நாடு

கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது : தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது : தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிப்பு. இதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிவரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத் தகுந்தது. அவ்வகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர்.

அய்யன் திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986-ஆம் ஆண்டுமுதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

விடுதலைப் போராட்டத் தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் - காமாட்சி இணையரின் புதல்வரான இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியலில் பட்டம் பெற்றவர். தமிழ்மறைக் குடமுழுக்குகள் 1400-க்கு மேல் நடத்தி இருக்கிறார். தமிழாகமத் திருமணங்கள் 3000-த்துக்கு மேலும் நடத்தியவர். அறநிலையத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்தவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சைவ சித்தாந்த நுண்பொருளுடன் திருக்குறளின் அறக்கருத்துகளைச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர். தமிழ்நாட்டில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைத் திருக்குறள் நெறியுடன் பரப்பி வரும் சைவசித்தாந்த அறிஞர். நுண்மாண் நுழைபுலம் கொண்ட முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் விருது

சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

பள்ளிப் பருவம் முதல் பெரியார் இயக்க மேடைகளில் முழங்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறார் வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி. சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, அரசியலமைப்பு சட்டக் கோட்பாடுகள் ஆகியவை குறித்து தமிழ்நாட்டு மேடைகளில் அதிக காலம் பேசிவருபவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பெரியாரியலுடன் சேர்ந்து பாவேந்தரின் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டு புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பரப்பும் பெரும் பணியைச் செய்து வருகிறார். தனது கருத்தை ஆழமாகவும், அதே நேரத்தில் துணிச்சலுடனும் மாற்றார் வைக்கும் வாதங்களை வலிமையாக மறுக்கும் வகையிலும் மேடைகளில் முழங்கி வரும் வழக்கறிஞர் திருமிகு அ.அருள்மொழி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது சிந்தனைச் செல்வன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கரின் சமநீதி, அரசியலமைப்புச் சட்ட நெறிகள், சமூகநீதி ஆகியவை குறித்து அழகாகவும், ஆழமாகவும் தமிழ்நாட்டு மேடைகளிலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் முழங்கி வருபவர் சிந்தனைச் செல்வன் அவர்கள். விளிம்புநிலை மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதல் குரல் எழுப்பக் கூடியவர். அவர்களது முன்னேற்றத்துக்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாகச் செய்யக் கூடியவர். தனிப்பட்ட முறையிலும் கூட்டியக்கம் மூலமாகவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக உழைத்து வருபவர் இவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். சிந்தனைச் செல்வன் அவர்கள் இந்த ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெறுகிறார்.

பேரறிஞர் அண்ணா விருது

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்குப் பேரறிஞர் அண்ணா விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவப் பருவ காலம்தொட்டு தமிழ் இயக்கத்தோடும், திராவிட இயக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்தவர். பேரறிஞர் அண்ணா அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர். மாணவப் பருவம் முதலே தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்தவர். இலக்கியம், அரசியல், சமூகம், இசை, நாடகம், பொருளாதாரம் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர். முதன்முதலில் 1971-இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவை முன்னவராக இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கும் மாண்பாளராகச் செயல்படும் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராசர் விருது

பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது, எஸ்.எம்.இதயத்துல்லா அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இளமை முதல் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். ஆங்கிலம், இந்தி, அரபி முதலிய பன்மொழிகளை அறிந்தவர். பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும் அனைத்துச் சமயக் கோட்பாட்டு இலக்கியங்களையும் ஒப்பிட்டு மேடைகளில் சிறப்புற உரையாற்றும் திறம் படைத்தவர். ஆசாத் பதிப்பகத்தின் மூலம் தமிழறிஞர்கள் நூல்களை வெளியிட்டு வருகிறார். கியூபாவில் நான், கீழைச் சொர்க்கம், திருநபியின் வாழ்வும் திருக்குறட்பாவும், இந்து சமயமும் திப்பு சுல்தானும், சுகநீதியில் சமநீதி, தியாக தீபங்கள் ஆகிய நூல்களை எழுதி இருக்கிறார். இசுலாமிய இலக்கியக் கழகத்தில் பொதுச்செயலாளராகச் செயல்பட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையின் தலைவராக இருக்கும் எஸ்.எம். இதயதுல்லா அவர்கள் பெருந்தலைவர் பெயரிலான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது : தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!

மகாகவி பாரதியார் விருது

பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர், பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுவரை 28 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் ஆகிய பன்முக ஆற்றலைக் கொண்டவர் நெல்லை ஜெயந்தா. கவியரங்க மேடைகளில் தனக்கெனத் தனிப்பாணியை வைத்துக் கைதட்டல்களை அள்ளுபவர். திரையுலகிலும் கோலோச்சி வருகிறார். நிலா வனம், திணை மயக்கம், வாலிப வாலி, தொட்டிலோசை, வாலி 100 ஆகிய நூல்களின் ஆசிரியர் இவர். 'அன்பே அம்மா' என்ற இவரது குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கல்லூரி மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தே.ச.இராமசுப்பிரமணியன் என்ற நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 89 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கவிஞர் யுகபாரதி இரண்டாயிரம் திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர். மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் இவர். மனப்பத்தாயம், பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, தெருவாசகம், அந்நியர்கள் உள்ளே வரலாம், மராமத்து, முனியாண்டி விலாஸ், பாதாளக் கொலுசு ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். நேற்றைய காற்று, ஒன்று, நடுக்கடல் தனிக்கப்பல், நானொருவன் மட்டிலும், இடம் பொருள் இசை, ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது திரைப்படப் பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளியாகி உள்ளது. நேர் நிரை என்ற பதிப்பகம் மூலம் பல்வேறு புத்தகங்களைப் பதிப்பித்து உள்ளார். கவிதையைக் காலத்தின் குரலாகப் பதிவு செய்து வரும் கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பாவேந்தர் விருதைப் பெறுகிறார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது

சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. இதுவரை 46 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களில் ஈடுபாட்டுடன் இயங்கித் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகச் செயலாற்றிப் பணி நிறைவு பெற்றவர் வெ.இறையன்பு அவர்கள். தமிழ்நாட்டு மேடைகளில் தனக்கெனத் தனிப்பாணியைக் கொண்டு சொற்பொழிவு ஆற்றிவரும் இவருக்கெனத் தனித்த சுவைஞர்கள் வட்டம் உண்டு. அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்தி இவர் ஆற்றும் உரைகள் பலரையும் பன்படுத்தி வருகிறது. பேச்சாற்றலைப் போலவே எழுத்தாற்றலும் நிரம்பப் பெற்றவர். போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள் இவரை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். இலக்கியத்தில் மேலாண்மை, படிப்பது சுகமே, சாகா வரம், ஏழாவது அறிவு, ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள், ஓடும் நதியின் ஓசை (2 பாகம்), வரலாறு உணர்த்தும் அறம், வாழ்க்கையே ஒரு வழிபாடு ஆகியவை இவரது புகழ்பெற்ற நூல்கள் ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது நூல்கள் வெளியாகி உள்ளன. அறிவுக்கடலாக இருக்கும் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் இந்த ஆண்டுக்கான திரு.வி.க. விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 23 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது முனைவர் சு.செல்லப்பாவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மு. சுடலையாண்டி - சு. வள்ளியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்த இவர் திருநெல்வேலி நகர இந்து தொடக்கப் பள்ளியில் 1967-இல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பு பற்றித் தனிவழிகளைக் கண்டுபிடித்து முறைகளைக் கையாண்டு பாடங்களைப் புதுமையான முறையில் நடத்தியவர். ஆசிரியர் சங்கக் கூட்டங்களிலும், மாதிரிப் பாடங்கள் நடத்தித் தமது பயிற்சி முறைகளை விளக்கிக் கூறி வந்தார். தனது ஆசிரியப்பணி நிறைவுக்குப் பின்பு 2004-இல் "இன்றைய தமிழக அரசியல் வரலாற்றில், தேசிய இயக்கங்களின் வீழ்ச்சியும், திராவிட இயக்கங்களின் வலுவும், நிலைப்பாடும்" என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் சு. செல்லப்பா அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கப்பட உள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” 2024-இல் தோற்றுவிக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டுக்கான இவ்விருது, விடுதலை விரும்பி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

திராவிட இயக்கத்துக்காகவும், அதன் கொள்கைகளுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்ட மகத்தான மனிதர்களில் ஒருவர் விடுதலை விரும்பி. எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் இவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் மணிக்கணக்கில் பேசக்கூடியவர். மாநிலங்களவையில் அவரது வாதங்கள் பல்வேறு மாநிலத்தவரை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. புள்ளிவிவரங்களுடன் அருமையாகப் பேசும் ஆற்றல் கொண்ட இவர் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர். விடுதலை விரும்பி, கொள்கைவாதியாகவே வாழ்ந்தும் வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை நிழலாக இருந்த விடுதலை விரும்பி அவர்களுக்கு கலைஞர் பெயரிலான விருது வழங்கப்படுகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

மேற்குறிப்பிட்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் திருவள்ளுவர் திருநாள் (16.1.2026) அன்று விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்படும்

banner

Related Stories

Related Stories