
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்‘, பேரறிஞர் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’, தமிழினத் தலைவர் கலைஞரின் ‘தூக்குமேடை', நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் என தமிழ்நாட்டு மேடைகளில் ஒலிக்கும் போது அவை வசந்தத்தின் இடிமுழக்கமாக இருந்தன. தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் கொள்கைத் தங்கங்களை உருவாக்கியவை, இது போன்ற நாடகங்களும் திரைப்படங்களும்தான்.
பாமர மக்கள் மனதிலும், கல்விச் சாலைக்குள் நுழைய முடியாத சமூகத்துக்கும் சமூகப் பாடத்தை எடுத்தவை இது போன்ற கலைப்படைப்புகள்தான். அதனால்தான் நாடகங்களுக்குத் தடை போடும் சட்டமே வந்தது. திரைப்படங்களுக்கு தணிக்கை நெருக்கடிகள் வந்தன. கலைஞரின் ‘பராசக்தி’ க்குத் தடை வந்தது. பல நூறு பக்கங்கள் புத்தகம் போடும் அளவுக்கு அன்றைய நெருக்கடிகள் அமைந்திருந்தன. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திராவிட இயக்கம் தனது பரப்புரையை தன் கையில் கிடைத்த அனைத்து வகையிலும் செய்தது.
பழமைவாதங்கள் மண்டிக்கிடந்த கலையை மக்கள் கலையாக மாற்றியதுதிராவிட இயக்கத்தவரின் கலைப் படைப்புகள்.
இதோ.. இன்று ஒரு 'பராசக்தி' பேரொளி எழுப்பி இருக்கிறது!
மீண்டும் திரையரங்குகளில் தீ பரவி வருகிறது. வசனத்தால் கொள்கையை விதைத்து, காட்சிகளால் இதயத்தை நனைப்பதாக இருக் கிறது 'பராசக்தி'. இன்றைய இளைய தலைமுறைக்கு, அந்தக் காலத்து மாணவர் சக்தியை, மொழிப் போராட்டத்தை, தமிழுக்காக தியாகம் செய்த வரலாற்றை மனதில் தைக்கும் வகையில் சொல்லி விட்டது இன்றைய 'பராசக்தி".
தமிழை, தமிழனை, தமிழ்நாட்டைக் காக்கும் போராட்டமாக இருப்பது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமே. 'அது மொழிப் போராட்டம் மட்டுமல்ல; நமது பண்பாட்டைக் காக்கும் போராட்டம்' என்றார் தந்தை பெரியார். அவர்தான் 1938 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா முதன்முதலில் கைதானார்.

சிறுவனாக இருந்த கலை ஞர், தமிழ்க்கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் வலம் வந்தார். பெண்களும், குழந்தைகளும் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கைதானார்கள். ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார் பெரியார். நடராசனும் தாளமுத்துவும் சிறையில் மரணம் அடைந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தித் திணிப்பு கைவிடப்பட்டது.
1948 ஆம் ஆண்டு மீண்டும் இந்திக்கு எதிரான போராட்டம். தந்தை பெரியாரும் அண்ணாவும் களம் அமைத்துப் போராடினார்கள். அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு இந்தி எழுத்துகளை அழித்துக் களமாடியது. இதன் உச்சகட்டம்தான் 1960களின் தொடக்கக் காலத்தில் உருவான மொழிப்போராட்டம் ஆகும். கலைஞரை மொழிப்போர்த் தளபதியாக தலைமைதாங்கக் கட்டளையிட் டார் அண்ணா. தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் திராவிடமுன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி தி.மு.க. கூட்டங்கள் நடந்தன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஒரு மாதம், இருமாதம் சிறைத் தண்டனை பெற்றனர். இந்த உணர்ச்சித் தீ தான் 1965 மொழிப் போராட்டமாக வெடித்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு முனையில் போராடியது. மாணவச் சமுதாயம் இன்னொரு முனையில் நின்று போராடியது. மாணவச் சமுதாயம் என்றால் அதிலும் இருந்தவர்கள் பெரும்பாலும் தி.மு.க. மாணவர்கள்தான். 1,569 தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். ஒன்பது பேர் தீக்குளித்து தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். தமிழ்நாடே எரிந்தது.
போராட்டத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. மாணவர் போராட்டத்தைத் தூண்டியதாக கலைஞர் அவர்கள் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டார். 'முரசொலி' நாளிதழ் கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. 'முர சொலி' மாறன் கைது செய்யப்பட்டார். அன்றைய மாணவச் சமுதாயத்தின் போர் முழக்கமாக 'முரசொலி' இருந்தது. இரத்தத்தில் தோய்ந்த ஐம்பது நாட்களாக 1965 ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் இருந்தன.
இந்த அரசியல் எழுச்சியின் மாபெரும் வடிவமாக 1967 சட்டமன்றத் தேர்தல்அமைந்தது. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது. இந்திக்கு இங்கு இடமில்லை. தமிழும் ஆங்கிலமுமே தமிழ்நாட்டில் இனி இருக்கும் என்று மாணவர் எண்ணத்தை மக்கள் எண்ணத்தைச் சட்டம் ஆக்கினார் பேரறிஞர் அண்ணா.

இந்த வரலாற்றைத் துணிந்து சொல்கிறது ‘பராசக்தி’ திரைப்படம். கொள்கை வரலாற்றை, கொள்கைக்காக உயிர் கொடுத்த வீரக் காவியத்தை, மாணவர்களின் தன்னலமற்ற வீரத்தை, மாணவச் சமுதாயத்தைக் காக்கும் அரணாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியதை மனக்கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது 'பராசக்தி"
'தமிழ் வாழ்க' என்று முழக்கமிட்டபடி திரையரங்குகளை விட்டு வெளியில்வர வைத்துள்ளது இந்தப் படம்.
ஒரு கல்லூரி மாணவர் சொல்கிறார், ‘தமிழைக் காக்க இவ்வளவு தியாகம் செய்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொண்டோம்’ என்கிறார். ஒரு மாணவி, இப்போதும் இதுபோல போராடத்தான் வேண்டி இருக்கிறது' என்கிறார். 'பராசக்தி' பொழுது போக்குப் படமல்ல; கொள்கையை விதைக்கும் படம் என்பதற்கு இந்த இருவர் வாக்குமூலம்தான் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதனை ஏற்கமறுத்ததால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விரோதமாக ரூ.2 ஆயிரம் கோடி பணத்தை தர மறுக்கிறது. சில கோச் சிங் சென்டர் நிறுவனங்கள் உண்டு, கொழுக்க உருவாக்கப்பட்ட 'நீட்' தேர்வானது, மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து வருகிறது. வடக்கில் இருந்த பல்வேறு மொழிகளை காவுவாங்கி விட்ட இந்தி, தெற்கிலும் அதே வேலையைக் காட்டி வருகிறது. நேர்முகத் தேர்வுகளில் இந்தி பேசாத மாணவர்கள் அடையும் அவமானம் சொல்லிமாளாது.
வட மாநிலக் கட்சியான பா.ஜ.க., இந்திக் கட்சியாக காட்சி அளிப்பதையே தனது அடையாளமாக நினைக்கிறது. வகுப்புவாதத்துக்கு அடுத்ததாக இந்தி ஆதிக்கமே பா.ஜ.க. மீதான கடுமையான விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு போராடும் நேரத்தில் 'பராசக்தி' வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!
வெல்வோம் ஒன்றாக!






