
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குற்றச்சம்பவங்களை தடுக்காமல் அம்மாநில முதலமைச்சர்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியைச் சேர்ந்தவர் சத்யோந்திர குமார். இவரது மனைவி சுனிதா தேவி. இந்த தம்பதிக்கு 20 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில், தனது மகளுடன் சுனிதா தேவி வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பாராஸ் என்பவர் இருவரையும் வழிமறித்து, சுனிதா தேவியின் மகளை கடத்த முயன்றுள்ளார். அப்போது தடுக்க முயன்ற சுனிதா தேவியையும், அவரது மகளையும் பாராஸ் மற்றும் அவரது நண்பர்கள் கொடூரமா தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சுனிதா தேவியின் மகள் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ”பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குற்றவாளிகளின் வீடுகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமாஜ்வாதி எம்எல்ஏ அதுல் பிரதான் வலியுறுத்தியுள்ளார்.






