
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.1.2026) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் – 2026” விழாவில், அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி, ஆற்றிய உரை பின்வருமாறு,
தாய் மண்ணான தமிழ் மண்ணிற்கு வந்திருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் அயலகத் தமிழர் நாள் வாழ்த்துகளைச் சொல்லி, புத்தாண்டு வாழ்த்துகளையும், தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளையும் சொல்லி, வருக! வருக! வருக! என வரவேற்கிறேன்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் உடன்பிறப்பாக நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். உலகின் பல நாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், தமிழர்களான நீங்களும், உங்களின் குடும்பத்தாரும், பல முக்கிய பொறுப்புகளிலும், நல்ல நிலையிலும் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்! மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நீங்கள் எல்லோரும், உங்கள் சொந்தங்களைப் பார்க்க தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். நாம் எல்லோரும் எதனாலும், யாராலும் பிரிக்க முடியாத தமிழ்ச் சொந்தங்கள்! தமிழினச் சொந்தங்கள்! இது பல்லாயிரம் ஆண்டு காலத்து சொந்தம். இன்னும் பலப்பல ஆண்டு தொடர இருக்கின்ற சொந்தம். நாடுகளும், கடல்களும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது!
70 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் நேரத்தில் இந்த மாபெரும் தமிழர் ஒன்று கூடக்கூடிய கடலை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நாசர் அவர்களுக்கும், துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
நம்முடைய நாசர் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் சத்தமிடுவார்! ஆனால் வேலை நடைபெறும். ஒரு வேலையை அவரிடத்தில் ஒப்படைத்தால், நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர் நம்முடைய நாசர் அவர்கள். நேற்றிலிருந்து நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் கொடுத்த பேட்டியை பார்த்து, நாசர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து ‘ப்ரூவ்’ செய்துவிட்டார்.
நூற்றாண்டுகளுக்கு முன் தங்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக, வாய்ப்புகளுக்காக பறந்து சென்றவர்கள் உங்கள் முன்னோர்கள். அவர்களை வாழ்க்கை தேடிப் சென்றவர்கள் என்று சொல்வதைவிட, அந்தந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தாங்களும் வளர்ந்து, தங்களின் உழைப்பால் அந்த நாட்டையும் வளப்படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு சிறந்த சான்று நீங்கள்தான்! வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டை மறக்காதவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வதை போலவே, அயல்நாட்டுத் தமிழர்களுக்கும் சகோதரனாக இருந்து நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
உங்களுக்காகவே அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. வேறு நாட்டில் செட்டிலான சிட்டிசனாக இருந்தாலும், அயலகத்தில் உழைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும், நீங்கள் எந்த குறையும் இல்லாமல் வளமாய் வாழ வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'அயலகத் தமிழர் நல வாரியம்' என்று 15 உறுப்பினர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்தோம்.
ஜனவரி 12 அயலகத் தமிழர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழால் இணைவோம், உலகெங்கும் தமிழ், தமிழ் வெல்லும் என்று கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 105 முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக,
7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித்தர திட்டமிட்டு, படிப்படியாக கட்டப்பட்டு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் துவக்கப்பட்டிருக்கிறது.
“தமிழ் வேர்களைத் தேடி பயணம்” மூலமாக உங்களை எல்லாம் தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
அயல்நாடுகளில் வேலைக்குச் சென்று அங்கு இறக்க நேரிடும் வாரிய உறுப்பினர் குடும்பத்திற்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் அமலில் இருக்கிறது.
உக்ரைன், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில், 2 ஆயிரத்து 398 தமிழர்களை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காகவே, தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற ஒரு அமைப்பைச் செயல்பட வைத்திருக்கிறோம்.
புலம் பெயர்ந்த மண்ணில் தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச் சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் அளிக்கிறோம். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கும் அயலகத் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து, கணியன் பூங்குன்றனார் விருது வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
அயலகத்தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, “தமிழ்மாமணி” விருதும், பட்டயமும் வழங்கியிருக்கிறோம்.
அயல்நாட்டுத்தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உறவுப் பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு “சிறந்த பண்பாட்டுத் தூதுவர்” விருதையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
உங்களை பாராட்ட வேண்டும் என்று மட்டுமல்ல, உங்களுடன் இருக்கும் உறவு தொடர வேண்டும் என்றுதான் இதையெல்லாம் செய்கிறோம். வாழ்வதும் வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும் என்று செயல்படும் அரசு நம்முடைய அரசு!
தமிழர்கள் எங்கே, எந்த நாட்டிலும் இருந்தாலும், அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அந்த எண்ணத்தோடு தான் இலங்கை தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு அண்மையில் நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். இன்றைக்கு காலையில் கூட அவைகள் எல்லாம் செய்திகளாக வந்திருக்கிறது; பத்திரிகைகளிலும் படித்திருப்பீர்கள்.
இலங்கையில் அறிமுகமாக இருக்கின்ற புதிய அரசியலமைப்புச் சட்டத்தால், அங்கே வாழுகின்ற நம்முடைய தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகள் எந்தவிதத்திலும் பாதிப்படையக்கூடாது; நீண்ட காலமாக அவர்கள் போராடி வரக்கூடிய அதிகார பரவலாக்கம் தமிழர்கள் வாழக்கூடிய மாகாணங்களுக்கும் கிடைக்கும்; கிடைக்க வேண்டும். நம்முடைய இந்த கோரிக்கையை இலங்கை அரசிடம், இந்திய அரசு வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த ஐந்து நபர்கள், கனவுகளைப் பற்றி இங்கே சொன்னார்கள். மாபெரும் கனவுகளைக் கொண்டது நம்முடைய தமிழினம்! அந்தக் கனவுகளை எல்லாம் அடைய வேண்டும் என்பதுதான், நம்முடைய திராவிட மாடல் அரசில், நாடு போற்றும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி, வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறோம்.
நான் நிச்சயம் சொல்கிறேன், இந்த வளர்ச்சி என்பது, நாம் அடுத்து நிகழ்த்தப் போகும் பாய்ச்சலுக்கான அடித்தளம்! அதற்காகத்தான், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் கேட்க வேண்டும் என்று “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறேன்!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, தமிழ்நாட்டு மக்கள், தங்களின் கனவுகளால் உருவாக்க வேண்டும் என்று, இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்!

2030-ஆம் ஆண்டை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறோம்! இன்னும் சொல்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான நீங்களும் உங்கள் கனவுகளை சொல்ல வேண்டும் என்றுதான், இன்றைக்கு உங்களிடமும் கனவுகளை கேட்டிருக்கிறோம். தமிழர்கள் கனவு கண்டால், அதை நிச்சயம் அடைந்தே தீருவோம்!
கனவுகளை சுமந்து வந்து, தாய்நிலத்தில் கனவுகளைச் சொல்லியிருக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது என்ன என்றால், உலகத்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தையும், வேர்களையும் மறக்காதீர்கள். உங்கள் உறவுகளை மறக்காதீர்கள். எக்காலத்திற்கும் பொருந்தும் உலக பொதுமறையைத் தந்த வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நாம்.
ஊரைத் தாண்டிய ஊரும் - உலகமும் எப்படி இருக்கும் என்றே தெரியாத காலத்தில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லோரையும் சொந்தங்களாக கருதி இலக்கியம் படைத்த கணியன் பூங்குன்றனாரின் மண் இது!
தமிழ் என்னும் உலக மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழ்தான் நம்மை ஒற்றுமைப்படுத்தும். சாதி வேற்றுமைகளையும், மத வேறுபாடுகளையும் வீழ்த்தி அனைவரையும் ஒன்றாக்கும் வல்லமை தமிழ் மொழிக்கு மட்டும்தான் உண்டு.
வாழும் நாடுகளால் நாம் பிரிந்திருந்தாலும், மொழி நம்மை இணைத்துவிடுகிறது. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது. அதனால்தான், இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர முடிந்தது.
மொழிக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல, மொழியுரிமை காக்க தங்கள் உயிரையே தந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதேவேளை, மொழிப்பற்றும், இனப்பற்றும்தான் நமக்கு உண்டு! அது மொழிவெறியாக, இனவெறியாக நாம் எப்போதும் மாறமாட்டோம்! நமக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும். உங்களின் கல்வியும், அறிவும்தான் உங்களை காக்கும்.
அறிவும், உழைப்பும்தான் உங்களை இவ்வளவு தூரத்திற்கு, இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இதை மட்டுமே நம்பி உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். நம்முடைய இலக்கியத்தை வைத்து, தமிழர்களின் பழம்பெருமையை நாம் பேசியபோது, “கற்பனைவாதிகள்” என்று சிலர் கிண்டல் செய்தார்கள். இன்னும் சிலர் இனவாதிகள் என்று நம்மை பழித்தார்கள். இலக்கியத்தில் இருப்பதெல்லாம் வரலாறு ஆகாது என்று சொன்னார்கள்.
ஆனால், தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம் புனைவுகளோ, அரசியலுக்காக சொன்னதோ இல்லை என்று இப்போது நிரூபித்துவிட்டோமா இல்லையா? வரலாற்று ஆதாரங்களை தேடி எடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தி, உலக அறிஞர்களையே ஏற்றுக்கொள்ள வைத்தோமா இல்லையா? நம்முடைய திராவிட மாடல் அரசு இந்த வரலாற்றுக் கடமையை செய்து காட்டியிருக்கிறதா இல்லையா?
கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக, நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்பது இன்றைக்கு உறுதியாகி இருக்கிறது.
கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது.
அந்தக் காலத்திலேயே கல்வி பெற்றவர்களாக தமிழர்கள் இருந்திருக்கிறோம்.
சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் கிடைத்த பொருளின் மூலமாக, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்று கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நம்முடைய கண்டுபிடிப்புகளையெல்லாம் அழகாக காட்சிப்படுத்தி,
'கீழடி அருங்காட்சியகம்' மற்றும் பொருநை அருங்காட்சியகத்தை நான் தான் அண்மையில் திறந்து வைத்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் கட்டாயம் அங்கு சென்று பார்க்கவேண்டும் - பார்வையிட வேண்டும்!
சிந்துவெளி எழுத்துகளில் 100 ஆண்டுகளாக புதைந்திருக்கும் புதிருக்கு விடை கண்டுபிடித்தால், எட்டரை கோடி ரூபாய் பரிசு என்று நானே அறிவித்திருக்கிறேன்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கத்தையும் நடத்தியிருக்கிறோம்.
சிந்துவெளி நாகரிகத்தை உலகிற்கு அறிவித்த சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை அமைத்திருக்கிறோம்.
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக அளவில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்று வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகறிய செய்ய உழைக்கும் அறிஞர்களுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.
இதனால்தான், “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, குறள் வார விழா நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது என்று அறிவித்திருக்கிறேன். வள்ளுவரைக் கொண்டாடுவதில் நம்மை அடித்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்!
மொழி சிதைந்தால், இனம் சிதையும். இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியையே இழந்துவிடுவோம்.
நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், ஒற்றுமையாக வாழுங்கள்! அந்த நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள். அதேவேளையில், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வாருங்கள். அங்கு உள்ளவர்களுக்கும் தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் சகோதரனான, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கிறான் என்று மறந்துவிடாதீர்கள்!
நமக்காக தமிழ்நாட்டில் ஒரு சகோதரன் இருக்கிறார்! தமிழ்நாட்டில் இருக்கிறான், இருக்கிறான் என்று நம்பிக்கையுடன் வாழுங்கள்!
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்!








