
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.1.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 விழாவில், அயலகத் தமிழர்களுக்கான தமிழ் மாமணி விருது, கணியன் பூங்குன்றனார் விருது மற்றும் சிறந்த பண்பாட்டுத் தூதுவர் விருது, என ஒன்பது விருதாளர்களுக்கு விருதுகளையும், தமிழ் மணம் திட்டத்தின் கீழ் 10 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ் மொழிக்கான பாடத்திட்ட புத்தகங்களை தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுக்கும் வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள்
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார் – அம்பேத்கர் சிந்தனை அமைப்பின் தலைவர் டாக்டர் அண்ணாமலை அவர்களுக்கு அயலகத்தில் வாழும் தமிழர்களில் தமிழுக்கு தொண்டாற்றியதற்காகவும், பன்முகத்தன்மையில் சிறந்து விளங்குவதற்காகவும் தமிழ் மாமணி விருது;
மலேசியாவில் உள்ள MAHSA பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டாக்டர் முகமது ஹனிபா பின் அப்துல்லா அவர்களுக்கு கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் கம்யூனிட்டி கிளப்புடன் இணைந்து சமூக நலப்பணிகள் ஆற்றி வரும் திரு. சரவணன் பத்மநாதன் அவர்களுக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும்;
ஜப்பானில் உள்ள இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவைச் சார்ந்த தமிழர்களுக்கு சட்ட மற்றும் பல்வேறு உதவிகள் செய்து வரும் திரு. செந்தில்குமார் இராமலிங்கம் அவர்களுக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
ஆஸ்திரேலியாவில் சூப்பா குவாட் இயக்கும் முதல் பெண்ணாக சாதனை படைத்த திருமதி கோகிலவாணி பிரகாஷ்தேவன் அவர்களுக்கு மகளிர் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதீப் குழுமத்தின் தலைவர் மற்றும் அபுதாபியில் உள்ள இந்தியா சமூக-கலாச்சார மைய பொது நிர்வாகி டாக்டர் அன்சாரி வாகித் அவர்களுக்கு வணிகப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் டரோபிகள் மருத்துவ நிறுவன பேராசிரியர், வியாட்நாம் – ஜெர்மனி மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் திருமலைசாமி வேலவன் அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் மரு. கபிலன் தர்மராஜன் அவர்களுக்கு மருத்துவப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருது;
வேர்களைத் தேடி திட்டம் மூலம் தமிழ் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அயலகத்தில் வாழும் தமிழருக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக ஆற்றி வரும் மியான்மர் நாட்டைச் சார்ந்த திருமதி தீபா ராணி (அ) சாவ்சூ தூசார் அவர்களுக்கு சிறந்த பண்பாட்டுத் தூதுவர் (வேர்களைத் தேடி) விருது;
என 9 விருதாளர்களுக்கு விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். தமிழ் மாமணி விருதாளருக்கு 10 இலட்சம் ரூபாய் காசோலை மற்றும் பட்டயமும், கணியன் பூங்குன்றனார் விருது மற்றும் சிறந்த பண்பாட்டுத் தூதுவர் விருது பெற்ற விருதாளர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் தாமிரப் பட்டயமும் வழங்கப்பட்டது.
தமிழ் மணம் திட்டத்தின் கீழ் 10 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள்
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து செயல்படுத்தும் தமிழ் மணம் திட்டத்தின் கீழ் அயலகத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் - பிரியா கிருஷ்ணன் (இந்தோனேசியா), அனிதா (இந்தோனேசியா), திருமதி சுப்புலெட்சுமி வீரபத்திரன் (இந்தோனேசியா), ஜெனிபர் டிக்னா (இந்தோனேசியா), உமாராணி (சிஷெல்ஸ்), இந்திரா (தான்சானியா), நந்தினி சிராஜூதின் (ஃபிஜி), செல்வமுத்துமாரி (ஃபிஜி), விஜயகுமார் (உகாண்டா) மற்றும் ஜெயந்தமலர் (மாலாவி) ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
1. ஜெர்மனியில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு (Mobility of Nurses to Germany)
அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கி தகுதியான மாணவர்களுக்கு ஜெர்மனியில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் OMCL மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், OMCL தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே. பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., அழகப்பா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் இராமநாதன் வைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. அயல்நாடுகளில் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நகர்வு (Mobility of Students for Education and Employment to Foreign Countries)
மனிதவள மேம்பாட்டு சான்றிதழ் உறுதிப்படுத்தல் (HRD Attestation), மொழி பயிற்சி மற்றும் வெளிநாடுகளில் பணியமர்த்தல் சேவைகள் வழங்குவதற்காக OMCL மற்றும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) இடையே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், OMCL தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே. பாலசுப்பிரமணியம், இ.ஆ.ப., VIT பல்கலைக்கழக நிறுவனர் - வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
3. இந்தியா ஜெர்மனி இன்க்யூபேஷன் மையம் தொடக்க விழா (Indo-German Incubation Centre - Inauguration)
தமிழ்நாடு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த Startup நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஜெர்மன் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் SICCI மற்றும் German Indian Business Alliance (GIBA) இடையே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், SICCI முதுநிலை துணைத் தலைவர் வி.என். சிவசங்கர், German Indian Business Alliance நிறுவனர் செல்வகுமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
4. வணிகப் புத்தாக்க மையம் - நோக்க அறிக்கை (Business Innovation Hub - Letter of Intent)
உயர் கல்வி நிறுவனங்களில் வணிக வாய்ப்புகளை உருவாக்க. ITnT இணைப்பு பங்குதாரராக கொண்டு, SICCI மற்றும் மைக்ரோசாஃப்டை சார்ந்த Invest to impact foundation இடையே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், SICCI துணைத் தலைவர் அம்பா பழனியப்பன், மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் பென் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ்மொழிக்கான பாடத்திட்ட புத்தகங்களை தமிழ்ச்சங்க பிரதிநிதிகளிடம் வழங்குதல்
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ்மொழிக்கான பாடத்திட்ட புத்தகங்களை அரசு செலவில் அயல்நாடுகளுக்கு அனுப்பி வைப்பதன் தொடக்கமாக, தாய்லாந்து - தமிழ்க் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் திரு. மகேஷ் ராஜா, ரீயூனியன் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் திரு.சோமேஸ்வரன், தான்சானியா – வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. புரூஸ்லீ ரூபன், பெங்களூரு – டி.ஆ.டி.ஓ. பொங்கல் சங்கமம் தலைவர் திரு. இரகுபதி ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்ப் பாட நூல்களை வழங்கினார்.
“உங்கள் கனவை சொல்லுங்க” திட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கான கனவுகளைப் பற்றிய கலந்துரையாடல்
“உங்கள் கனவை சொல்லுங்க” திட்டத்தில், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கும் உயரிய நோக்கில் தமிழ்நாட்டிற்கான கனவினை அயலகத் தமிழர்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரடியாக சிங்கப்பூரில் வசிக்கும் இறை மதியழகன், ஐக்கிய அரபு ஆமீரகத்தில் வசிக்கும் சசி குமார், சாரா ஆகியோரும், காணொலிக் காட்சி வாயிலாக அமெரிக்காவில் வசிக்கும் திருமதி கலையரசி, ஆர்மீனியாவில் வசிக்கும் கண்ணன் ஆகியோரும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த தங்கள் கனவுகளை தெரிவித்தனர்.






