
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன.13) சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி ஜாபர்கான்பேட்டையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஆற்றிய உரை:-
இன்றைக்கு சைதாப்பேட்டை தொகுதியில் அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற கலைஞர் கணினி பயிலகத்தில் பயின்ற 1,500 மாணவ மாணவிகள், ஆட்டோக்கள் பெற்ற 1,500 ஆட்டோ ஓட்டுநர்கள் என மொத்தம் 3,000 பேருக்குப் பொங்கல் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வருகை தந்துள்ள அனைவருக்கும் முதலில் என் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாகப் பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஒரு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால் பொங்கல்தான் நம் பண்பாட்டின் அடையாளம், தமிழர் பண்பாட்டின் அடையாளம். முழுக்க முழுக்க இயற்கைக்கு நன்றி சொல்கின்ற விழா என்றால் அது பொங்கல் திருவிழா. அதேமாதிரி உழைப்பைக் கொண்டாடுகின்ற விழா என்றால் நம்முடைய பொங்கல் திருவிழாதான். இவ்வளவு சிறப்பான ஒரு பொங்கல் நிகழ்ச்சியை நாம் அத்தனை பேரும் சேர்ந்து இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு முன்பு பேசிய சகோதரி, சகோதரர்கள் எல்லோரும் தாம் அடைந்த பலன்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுப் பெருமையாகப் பேசினார்கள். அவர்களின் மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் பார்க்கின்ற பொழுது இவ்வளவு திட்டங்களை, இவ்வளவு நலத்திட்ட உதவிகளை, கணினி பயிற்சியாக இருக்கட்டும், ஆட்டோவாக இருக்கட்டும், காராக இருக்கட்டும், அழகு நிலையத்திற்கான பயிற்சியாக இருக்கட்டும், இப்படி ஒவ்வொன்றையும் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்கள் இவ்வளவு சிறப்பாக இந்தச் சைதாப்பேட்டை தொகுதியில் செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கின்ற பொழுது என்னுடைய வாக்கு, நான் தங்கியிருப்பது, என்னுடைய இல்லம் இருப்பது மயிலாப்பூர் தொகுதியில். நான் மயிலாப்பூரிலிருந்து தொகுதி மாறி இந்தச் சைதாப்பேட்டை தொகுதிக்கு வந்துவிடலாமா என்ற ஒரு நினைப்பைத் தருகின்ற அளவுக்கு அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்கள் இங்கே சிறப்பாக அனைத்தையும் செய்திருக்கின்றார். அதனால்தான் இங்கே வந்திருக்கின்ற அத்தனை பேரும் மகிழ்ச்சியோடு சிரித்த முகத்தோடு அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி எப்போதுமே தொடரும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைக்கு நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியைச் சைதாப்பேட்டையில் மட்டுமல்ல, கடந்த நான்கு ஐந்து நாட்களாகத் தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் நாம் கொண்டாடிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய கட்சியின் சார்பாக, இயக்கத்தின் சார்பாக நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தாலும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இன்றைக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கின்றோம்.
பொங்கலை முன்னிட்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை, இனிப்பான, மகிழ்ச்சியான செய்திகளை வழங்கியிருக்கிறார். குறிப்பாகச் சென்ற மாதம் வரைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஒரு கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த ஜனவரி மாதத்திலிருந்து அது உயர்த்தப்பட்டு இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல சில நாட்களுக்கு முன்பு 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குகின்ற திட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். இறுதி ஆண்டு பயில்கின்ற மாணவர்கள் அத்தனை பேருக்கும் இலவச மடிக்கணினி திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். இப்படிப் பல்வேறு திட்டங்கள், மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவிகளுக்குப் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்குத் தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் இப்படிப் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் இன்றைக்குச் செய்து வருகிறார்.
இதையெல்லாம் விடக் கூடுதல் மகிழ்ச்சியாக இந்த ஆண்டு பொங்கலுக்காக நம் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கத் தொகையைப் பொங்கல் பரிசோடு சேர்த்துக் கொடுத்திருக்கிறார். இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இங்கே உழைப்பின் அடையாளமாக இருக்கின்ற ஆட்டோ ஓட்டுநர்கள் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள். கூடுதல் மகிழ்ச்சி. அதிலும் 50 சதவிகிதப் பேர் மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் வந்திருக்கிறீர்கள், பார்க்கின்ற பொழுது மிகப் பெருமையாக இருக்கிறது.
ஒரு காலத்தில் பெண்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு உரிமை கிடையாது, படிப்பதற்கு உரிமை கிடையாது, ஆண்களோடு பேசுவதற்கு உரிமை கிடையாது. இதையெல்லாம் ஒழிக்க வேண்டும், பெண்கள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதே அதற்குத்தான் காரணம். தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் கையில் இருக்கக்கூடிய சமையல் கரண்டியைப் பிடுங்கிவிட்டு அவர்கள் கையில் புத்தகத்தைக் கொடுக்க வேண்டும், பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று சொன்னார். இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் புத்தகத்தை மட்டுமல்ல, அதனுடன் மடிக்கணினியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு இத்தனை மகளிர் இவ்வளவு பெருமையோடு ஆட்டோ ஓட்டுநர்களாக அமர்ந்து இருக்கிறீர்கள். உங்களைப் பார்க்கின்ற பொழுது மிகுந்த பெருமையாக இருக்கிறது.
இன்றைக்குச் சென்னையின் ஒரு அடையாளமாக இருப்பது இங்கே வந்திருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுநர்கள் நீங்கள்தான். இன்றைக்கு நாமெல்லாம் கூகுள் மேப் பயன்படுத்துகிறோம். ஆனால் கூகுள் மேப் இல்லாத காலத்தில் சென்னையின் மேப்பாக இருந்தவர்கள் இங்கே வந்திருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுநர்கள் நீங்கள்தான். அந்த அளவுக்குச் சென்னையின் ஒவ்வொரு சாலையையும் ஒவ்வொரு தெருவையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கக்கூடியவர்கள் நீங்கள். அப்படிப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உங்களைச் சந்தித்து உங்களோடு பொங்கல் கொண்டாடுவது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
இந்த நேரத்தில் நம் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இவ்வளவு இளைஞர்களுக்குக் கணினி பயிற்சி கொடுப்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. முன்னெல்லாம் கல்வியறிவு பெற்றவர்கள் என்று சொன்னால் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். ஆனால் இன்றைக்கு அது போதாது. இப்போது கல்வியறிவு என்று சொன்னால் கண்டிப்பாகக் கணினியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். இனி வரக்கூடிய காலத்தில் உடல் சார்ந்த திறனைத் தவிர, டிஜிட்டல் திறன்கள் இருப்பவர்களுக்குத்தான் இன்றைக்கு எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கிறது.

அந்த வகையில் இங்கே இருக்கக்கூடிய 1,500 மாணவ மாணவிகளுக்குக் கணினி பயிற்சி கொடுத்து அவர்களுடைய எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் மா.சுப்ரமணியன் அவர்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் நம்முடைய இளைஞர்களுக்குத் தகுதி திறமை கிடையாது என்று ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள், எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் நாங்களும் சாதித்துக் காட்டுவோம் என்று சொன்னார்கள். அதை இன்றைக்குச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சாட்சியாகத்தான் இத்தனை மாணவிகள், இளைஞர்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு இத்தனை மாணவிகள் படித்திருக்கிறீர்கள், இவ்வளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால், வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பல உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு மிக மிக முக்கிய, அடிப்படை காரணம் என்னவென்றால் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த அந்த இருமொழிக் கொள்கை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழ்நாட்டில் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மட்டும்தான் இடம். இந்தித் திணிப்புக்கு என்றுமே இடம் இல்லை என்று சொன்னவர்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அப்படி இருமொழிக் கொள்கை மூலமாக முன்னேறிய நம்மை இன்றைக்கு ஒரு குழு திட்டம் போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு மீண்டும் மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்து இந்தியைக் மீண்டும் நம்மீது திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதற்காகக் கொண்டு வரப்படுவதுதான் புதிய கல்விக் கொள்கைத் திட்டம். இந்த புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் நம்முடைய முதலமைச்சர் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். ஏனென்றால் இந்தப் புதிய கல்விக் கொள்கையில் மீண்டும் எப்படியாவது இந்தியைத் தமிழ்நாட்டிற்குள் திணிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மீண்டும் சமஸ்கிருத மொழியைத் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது திணிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் அந்த அம்சங்கள் இருக்கின்றன. மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் திணிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். ஒன்றிய அரசு நாம் கட்டியிருக்கக்கூடிய வரிப் பணத்தைப் பிரித்து நமக்குக் கொடுக்க வேண்டும்.
கல்வி நிதியாக மட்டும் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 2,500 கோடி கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்க வேண்டும், ஒன்றிய பா.ஜ.க அரசு பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் சென்ற ஆண்டிற்கு வழங்கவில்லை. ஏனென்று கேட்டால் சொல்லிவிட்டார்கள்: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள், கொடுக்க முடியாது, ஏற்றுக்கொண்டால் கொடுக்கிறோம் என்று சொல்லி மிரட்டிப் பார்த்தது ஒன்றிய அரசு.
ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நீங்கள் புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் இந்தி திணிக்கப் பார்க்கிறீர்கள், சமஸ்கிருதத்தைக் கொண்டு வரப் பார்க்கிறீர்கள். 2,500 கோடி இல்லை, நீங்கள் 10,000 கோடி கொடுத்தாலும் என்றைக்குமே தமிழ்நாட்டிற்குள் நான் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன், என் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி இன்றைக்குச் சட்டப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்முடைய தமிழ்நாடு அரசு.
அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு எதிர்க்கும். ஏனென்றால் இது பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்ற வைத்த தீ. தலைமுறை தலைமுறையாகப் பரவிக் கொண்டிருக்கக்கூடிய தீ. இன்றைக்கு அண்ணா வழியில், கலைஞர் வழியில்தான் நம் முதலமைச்சர் அவர்கள் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.
இப்படி மொழி உரிமை, நிதி உரிமை, மாநில உரிமை என்று இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முதலமைச்சர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்தான் நம் முதலமைச்சர் அவர்கள். அதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
சமீபத்தில் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியினுடைய தலைவர், அவர் பெயர் மெகபூபா முஃப்தி அவர்கள். அவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீரில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்கின்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்கிறார். அவரின் தாய்மொழியான காஷ்மீரியில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பத்திரிகையாளர்கள் குறுக்கிட்டு அவரிடம் கேட்கிறார்கள். அம்மா நீங்கள் வந்து உருதுவில் பேசுங்கள் அல்லது இந்தியில் பேசுங்கள் என்று குறுக்கிட்டுச் சொல்லும் பொழுது அம்மையார் அவர்கள் சொல்கிறார்கள். என்னை, என் தாய்மொழியில் பேசக்கூடாது என்று சொல்கிறீர்களே, உங்களுக்குத் தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கு இருக்கின்ற முதலமைச்சர் என்னுடைய சகோதரர் ஸ்டாலினைப் பார்த்துச் சொல்வதற்குத் தைரியம் இருக்கிறதா என்று அங்கு காஷ்மீரில் இருக்கக்கூடிய ஒரு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் நம்முடைய முதலமைச்சரை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்கள்.

இப்படி மொழி உரிமை, மாநில உரிமை என்று வந்துவிட்டால் காஷ்மீர் வரைக்கும் நம் தலைவர், நம் முதலமைச்சரின் பெயரைத்தான் அவர்களுக்கு ஞாபகம் வருகிறது. இன்னும் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு யாருமே பேச முடியாத சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு 2,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
ஆனால் நம்முடைய தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் 150 கோடி ரூபாய். சமஸ்கிருதத்திற்கு 2,600 கோடி, இன்னும் பல வகையில் தமிழ்நாட்டின் நிதி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்குச் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதித் தொகையைக் கொடுக்கவில்லை.
ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய 10,000 கோடி ரூபாயையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி வரி வசூல், அதில் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் ஒன்றிய அரசு நமக்குக் கொடுக்க வேண்டியது இன்னும் கொடுக்கப்படவில்லை. இப்படிப் பல்வேறு திட்டங்களில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் நிதி உரிமையைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரைக்கும் அனுமதி கொடுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை உங்களுக்குத் தெரியும், ஒரேயொரு செங்கல்லை வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது என்று போய்விட்டார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் அப்படி கிடையாது. ஆட்சிக்கு வந்ததும் கிண்டியில் இருக்கக்கூடிய கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, இன்றைக்கு 240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த மருத்துவமனையை நம் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்.
இவ்வளவு ஓர வஞ்சனைகளையும் கொடுமைகளையும் ஒன்றிய அரசு இன்றைக்குச் செய்துவிட்டு, இன்றைக்குப் பாசிஸ்டுகள் டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டை எப்படியாவது ஆளலாம் என்று முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பழைய அடிமைகளும் அவர்களோடு சேர்ந்து இன்றைக்குப் புது அடிமைகளும் சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எத்தனை பேரை அழைத்துக்கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தையும், நம்முடைய முதலமைச்சர் அவர்களையும்தான் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எஸ்.ஐ.ஆர் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதை முதன்முதலில் எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம், நம்முடைய தலைவர்தான்.
எஸ்.ஐ.ஆர் திட்டத்தின் மூலமாக, சிறப்புத் தீவிரத் திருத்தம் மூலமாகத் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கிறார்கள். இந்த 97 லட்சம் வாக்காளர்கள் மிக முக்கியமானவர்கள். பெரும்பான்மையானவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் மகளிருடைய வாக்குகள், சிறுபான்மை மக்களுடைய வாக்குகள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், நிச்சயம் மகளிரும் சிறுபான்மையினரும் பா.ஜ.க-விற்கும் அடிமைகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று திட்டம் போட்டு 97 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கிறார்கள்.
சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்கிறது ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம். இங்கே வந்திருக்கக்கூடிய உங்களிடம் நான் உரிமையோடு கேட்டுக்கொள்வது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா? உங்கள் பெயர் மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவர்கள், உங்கள் குடும்பத்தினர், உங்களின் நண்பர்கள் ஆகியோரின் பெயர்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கிறதா என்று தயவுசெய்து சரிபாருங்கள்.
நம்முடைய பெயர்களைச் சேர்ப்பதற்கு வருகின்ற 18-ஆம் தேதி வரைக்கும் நமக்கு கால அவகாசம் இருக்கிறது. கழகத்தின் பி.எல்.ஏ 2-கள் மூலமாக உங்களுடைய பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சியில் தயவுசெய்து ஈடுபடுங்கள். தகுதியான ஒரு வாக்காளரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது.
உங்களின் வாக்குரிமையை நாம் பாதுகாத்தாக வேண்டும். வர இருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் சுயமரியாதையை, நம்முடைய மாநில உரிமையைப் பாதுகாக்கின்ற தேர்தல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல் முதல் பாகம் நான்கரை ஆண்டு ஆட்சியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இரண்டாம் பாகத்தை நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் அமைத்துக் கொடுப்பார்கள். அதில் நம் ஆட்சியின் சாதனைகள் நிச்சயம் தொடரும். ஆகவே இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதியில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் வென்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் நம்முடைய முதலமைச்சர்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமருவார்.
அதற்குத் தொடக்கமாக இந்தச் சென்னை தெற்கு மாவட்டமும், இந்தச் சைதாப்பேட்டை தொகுதியின் வெற்றியும் நிச்சயமாக இருக்க வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பு நாற்காலியில் அமர வேண்டும் என்றால், வந்திருக்கக்கூடிய சகோதரிகள், சகோதரர்கள் நீங்கள் அத்தனை பேரும் அடுத்த இரண்டு மாதங்கள் களத்தில் இறங்கி பிரச்சாரத்தை, ஏன் இந்தப் பகுதி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அந்தப் பிரச்சாரத்தை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மா.சுப்ரமணியன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டு, வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.






