
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்றிய உரை,
சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இந்த நிகழ்வுதான் 2026-இல் நான் உரையாற்றும் முதல் நிகழ்வு. அதில் நான் பெருமை அடைகிறேன்.
திருச்சியின் பெருமைவாய்ந்த ஜமால் முகமது கல்லூரியில், சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். அதுவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக! இது நம்மால் மட்டுமே முடியும்! தமிழ்நாட்டில் மட்டுமே முடியும்!
சாவித்திரிபாய் புலே தனது கணவருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட துவங்கியதால் உறவினர்கள் கைவிட்டார்கள். வீட்டை விட்டே வெளியேற்றினார்கள். அப்போது அவர்களுக்கு ‘உஸ்மான்’ எனும் இஸ்லாமிய நண்பர்தான் அடைக்கலம் தந்தார். அந்த உஸ்மான் அவர்களின் சகோதரிதான் இந்தியாவின் முதல் பெண் இஸ்லாமிய ஆசிரியர் எனும் பெருமையும் பெற்றார். அவர் பெயர் ‘பாத்திமா!’. அவரும் சாவித்திரிபாய் புலே அவர்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.
இவ்விழாவின் மூலம் சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாளை மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழ்நாட்டின் சமத்துவத்தையும் சமூகநீதியையும் நாம் கொண்டாடுகிறோம்.
சாவித்திரிபாய் புலே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், கைம்பெண்களுக்கும் கல்விக் கற்றுக்கொடுத்தார். இதனால் ஆதிக்க இந்து சனாதனவாதிகள் கோபம் கொண்டார்கள். இதனால் அவர் மீது மலம் வீசினார்கள். ஆனால் நாமோ அவர் மீது மலர் தூவுகிறோம். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

தன் மீது மலம் வீசப்பட்டாலும் சிறிதும் தளராமல் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்விக் கற்றுக்கொடுத்த புரட்சியாளர்தான் சாவித்திரிபாய் புலே!
சில மாதங்களுக்கு முன்பு ‘புலே’ எனும் திரைப்படம் வெளிவந்தது. இந்தியாவின் முதல் மகாத்மா எனப் போற்றப்படும் ஜோதிராவ் புலே அவர்களின் வரலாற்றை சொல்லும் திரைப்படம். இவர்தான் சாவித்ரிபாய் புலே அவர்களின் கணவர்.
இந்தப் படத்தின் ட்ரைலர் வெளிவந்த போதே ஆதிக்கவாதிகள் எதிர்க்கத் தொடங்கினார்கள். தணிக்கை குழுவினர் இப்படத்தின் பல காட்சிகளை நீக்கச் சொல்லியுள்ளார்கள். படம் வெளிவருவதற்கு பல தடைகளையும் ஏற்படுத்தினார்கள்.
அரசியல் ரீதியாக பார்த்தால் அமலாக்கத் துறையை வைத்துதான் ஒன்றிய அரசு மிரட்டுகிறது. அரசியல் செய்கிறது எனப் புரியும். ஒன்றை நுணுக்கமாக நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பண்பாடு இலக்கிய ரீதியாகவும் அவர்கள் மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியாகத்தான் புலே திரைப்பட பிரச்சனையை சொல்கிறேன்.
அமலாக்கத் துறை மட்டுமல்ல… திரைப்பட தணிக்கை வாரியம்-சாகித்ய அகாடமி விருது வழங்கும் குழு என தன்னிச்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் அனைத்தையுமே பா.ஜ.க. அரசு தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது.
தற்போது தமிழில் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுவதில் கூட அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1848-ம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண் குழந்தைகளுக்கான பள்ளியை பூனேவில் தொடங்கினார். ஒன்பது குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார் சாவித்திரி பாய் புலே. 1852-ம் ஆண்டு அவரது பள்ளி மாணவமணிகளின் எண்ணிக்கை 150 ஆகவும், 1854-ம் ஆண்டு 200-ஐயும் எட்டியது.
`இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை' எனப் போற்றப்படுபவர். அவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனது மட்டுமல்லாமல் தன்னிடம் படித்த 417 மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த தொடர்ச்சியின் மூலம் நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம்! சாவித்திரிபாய் புலே அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த 417 ஆசிரியர்களும் பல்லாயிரம் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள். அந்த பல்லாயிரம் மாணவர்கள் பல இலட்சம் மாணவர்களுக்கு கல்விக் கற்றுக்கொடுத்திருப்பார்கள். இதுதான் கல்வியின் சக்தி! ஆசிரியப் பெருமக்களின் பலம்!

சாவித்திரிபாய் புலே மிகச்சிறந்த கல்வியாளர் மட்டுமல்லாமல், மிகப்பெரும் சமூக சீர்த்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். பெண் சிசு கொலையைத் தடுக்கப் போராடினார். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்கள் கைம்பெண்களாக மாறும் அவலநிலை நிலவியது. அப்போது அவர்களுக்கு மொட்டை அடிக்கும் வழக்கமும் இருந்தது. அதை அடியோடு அழிப்பதற்கு போராடி வெற்றியும் கண்டவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே அவர்கள்.
இந்தக் கூட்டத்தில் B.Ed பயிலும் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். அது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனென்றால் கற்பிக்கும் முறையை நீங்கள் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்திய சாவித்திரிபாய் புலே போன்ற ஆசிரியப் பெருமக்களின் வரலாற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அவ்வகையில் உங்கள் முன் சாவித்திரிபாய் புலே பற்றி உரையாற்றுவது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
மராட்டிய மொழியின் கவிதை இலக்கியத்தில் மாபெரும் திருப்புமுனையைத் தந்தவரும் சாவித்திரிபாய் புலே அவர்கள்தான். ஆம் அவர் கவிஞராகவும் திகழ்ந்தார்!
“Be self-reliant, be industrious Work, gather wisdom and riches, All gets lost without knowledge We become animal without wisdom” அதாவது ”சுயசார்புடன் இரு, அயராது உழைத்திடு அறிவையும் செல்வத்தையும் சேர்த்திடு, அறிவில்லாமல் அனைத்தும் வீணாகிப் போகும், அறிவின்றி நாம் மிருகங்களாகவே மாறிவிடுவோம்” என அறிவின் அவசியத்தை தனது கவிதையின் மூலம் உணர்த்தினார்.
“போ, கல்வி பெறு, புத்தகத்தைக் கையில் எடு, அறிவும் சிந்தனையும் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை!” என தனது கவிதையின் மூலம் கல்வியின் அவசியத்தை உணர்த்தி ஆணையிட்ட சாவித்திரிபாய் புலே அவர்களின் புகழைப் போற்றுவோம்.
இந்நேரத்தில் ‘சாவித்திரிபாய் புலே’ அவர்களின் பெயரில் பெண் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விருது வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு இதனை எடுத்துச்செல்வோம் என உறுதியளிக்கிறேன்.
தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் பக்குவப்படுத்தப்பட்ட நாம் சாவித்திரிபாய் புலே போன்ற புரட்சியாளர்களை என்றும் போற்றுவோம்.
நன்றி








